ஜூன் 13 முதல் 21 வரை மழை பெய்யும்: மழைராஜ்

சனி, 11 ஜூன் 2011 (20:08 IST)
கேரள, கர்நாடக மாநிலங்களில் தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துவரும் நிலையில், திங்கட்கிழமை முதல் சென்னை உள்ளிட்டு தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்று மழை குறித்து ஆய்வு செய்துவரும் பெரம்பலூர் மழைராஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று அனுப்பியுள்ள தொலை நகலில், “ஜூன் 11ஆம் தேதி கணிப்பின்படி, தென்மேற்கு மத்திய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி தீவிரமடையும் வாய்ப்புள்ளது. இதனால் கேரளா, கர்நாடகா, மராட்டியம், குஜராத், மத்திய பிரதேசம், ஆந்திர, ஒரிசா, பீகார் ஆகிய மாநிலங்களில் ஜூன் 13ஆம் தேதிமுதல் 21ஆம் தேதிவரை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, நீலகிரி, கோயமுத்தூர், சேலம், தரும்புரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், சென்னை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பிற மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென்மேற்கு பருவ மழையை பொறுத்தவரை தற்போதைய வானிலை கணிப்பின்படி, கேரளா, கர்நாடகா, மராட்டியம், பீகார், ஒரிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில் சராசரியை விட அதிக மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

தற்போதைய வானிலை கணிப்பின்படியும், நிலநடுக்க தேதியின் கணிப்பின்படியும் ஜூன் 12,26 ஆகிய தேதிகளில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்