ஜுன் மாதம் 18 ம்தேதி வானிலை கணிப்பின்படி தமிழகம் உள்பட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட கூடுதல் மழை பெய்ய சாத்தியகூறுகள் உருவாகியுள்ளது என்று மழை குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் மழைராஜ் தெரிவித்துள்ளார்.
ஜுன் 11 ம்தேதி வெப்துனியாவிற்கு அனுப்பிய கடிதத்தில் ஜுன் 13 முதல் 17 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தேன். அதேபோல் தற்போது ஜுன் 13 முதல் திருச்சி, பெரம்பலூர், சேலம், நீலகிரி உள்பட தமிழகத்தின் ஒரிரு பகுதிகளிலும் கேரளா, கர்நாடாகாவிலும் மழை பெய்து வருகிறது.
வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமடைய வாய்ப்புள்ளதால் தற்போது பெய்யும் மழை ஜுன் 21 வரை நீடிக்க வாய்ப்புள்ளது. கடந்த காலங்களில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையிலும் மேகங்களை அடிப்படையாக கொண்டும் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் இந்தியாவில் எவ்வாறு இருக்கும் என்பதை கணித்துள்ளேன்.
தமிழகத்தை பொறுத்தவரை நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், தேனி, மாவட்டங்களில் இயல்பைவிட கூடுதல் மழையும், கோயமுத்தூர், ஈரோடு, நாமக்கல், கரூர், விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை, திருச்சி உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் சராசரி மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
கேரளா மாநிலத்தை பொறுத்தை பொறுத்தவரை கண்ணூர், கோழிக்கோடு மாவட்டங்களில் மிக பலத்த மழையும், கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் சராசரியைவிட கூடுதல் மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
கர்நாடாகா மாநிலத்தை பொறுத்தவரை பெங்களூரு, மங்களூர், ஹசன், கார்வார், பெல்லாரி, ரெய்ச்சூர், சித்ரதுர்க்கா, ஹாவேரி, மாண்டியா, உள்பட கர்நாடகாவின் பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பைவிட கூடுதல் மழையும், ஒரு சில பகுதிகளில் வரலாறு காணாத மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
ஆந்திராவை பொறுத்தவரை, மச்சிலிப்பட்டிணம், காக்கிநாடா, விசாகப்பட்டிணம், குண்டூர், கம்மம், ஹைதராபாத், கர்னூல், அனந்தப்பூர், சித்தூர் உள்ளிட்ட ஆந்திராவின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பைவிட கூடுதல் மழைபும் ஒரு சில பகுதிகளில் வரலாறு காணாத மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை கேரளா, கர்நாடாகா, ஆந்திரா உள்பட தென் மாநிலங்களிலும், மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம் உள்ளிட்ட இந்தியாவின் மத்திய மாநிலங்களிலும், ஒடிஷா, மேற்கு வங்காளம், அஸ்ஸாம், மேகாலயா, நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் பெரும்பாலான மாநிலங்களில் இயல்பைவிட கூடுதல் மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. பொதுவாக தென்மேற்கு பருவ மழை இந்தியாவில் சராசரியை விட கூடுதல் மழையும், ஒரு சில இடங்களில் வரலாறு காணாத மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
தென்மேற்கு பருவமழை காலத்தை பொறுத்தவரை தென் இந்தியாவில் சிறப்பாக மழை பொழியும் காலங்களில் பெரும்பாலான உலக நாடுகளிலும் நல்ல மழை பெய்துள்ளது. எனவே, 2012ம் ஆண்டு தென் மேற்கு பருவமழையானது இந்தியாவிற்கு மட்டுமல்லாது பெரும்பலான நாடுகளிலும் பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளது.
தென்மேற்கு பருவமழை தாமதமாக ஜுன் 3 ம்தேதி முதல் பெய்ய துவங்கினாலும் ஜுன் 25 தேதிக்கு பிறகு இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் முன்கூட்டியே பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளது என்று மழைராஜ் தெரிவித்துள்ளார்.