கிராம வேலை வாய்ப்புத் திட்டம்: 4 கோடி குடும்பங்கள் பயன்பெற்றன: மத்திய அரசு

புதன், 5 ஜனவரி 2011 (13:07 IST)
கிராமப் புறங்களில் ஆண்டிற்கு 100 நாட்கள் வேலைக்கு உத்தரவாதம் அளிக்கும் மகாத்மா காந்தி தேச ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் 2010ஆம் ஆண்டில் 4 கோடி குடும்பங்கள் பயன்பெற்றதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, கடந்த ஆண்டில் 3.9 கோடி குடும்பங்கள் பயனடைந்தன் என்றும், இதில் பெண்கள் அதிக அளவில் - 51 விழுக்காடு பயன்பெற்றதாக தெரிவித்துள்ளது.

மகாத்மா காந்தி தேச ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் சில சறுக்கல்கள் இருப்பதாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் மன்மோகன் சிங் சுட்டிக்காட்டினார். பல இடங்களில் வேலைக்கு உரிய நாள் ஊதியமான ரூ.100 தரப்படுவதில்லை என்று புகார்கள் வந்துள்ளதாகத் தெரிவித்தார். இதனையடுத்து இத்திட்டம் மத்திய அரசின் கூடுதல் கண்காணிப்பில் நடத்தப்பட்டது என்றும், அது மிக அதிக அளவில் கிராம்ப் புற மக்களுக்கு பயனளித்துள்ளது என்று ஊரக மேம்பாட்டு அமைச்சகம் கூறியுள்ளது.

வேலை வாய்ப்புத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதையடுத்து, இரண்டாம் கட்டமாக, நகர் புற வசதிகளை கிராமப் புறங்களில் ஏற்படுத்தும் ‘புறா’ (Providing Urban amenities in Rural Areas - PURA) திட்டத்தை இந்த ஆண்டில் நடைமுறைப்படுத்த ஊரக மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்