எண்டோசல்ஃபான் பூச்சிக் கொல்லி பயன்படுத்த கர்நாடகமும் தடை விதித்தது
வியாழன், 17 பிப்ரவரி 2011 (16:44 IST)
முந்திரிப் பயிரை தாக்கும் பூச்சிகளைக் கொல்ல தெளிக்கப்படும் எண்டோசல்ஃபான் இராசயணத்தால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பையடுத்து, அதன் பயன்பாட்டிற்கு கர்நாடக அரசு தடை விதித்துள்ளது.
எண்டோசல்ஃபான் பயன்பாட்டினால் விவசாயிகளுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பிறவு ஊனம் ஏற்படுவது உட்பட பல உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படுகிறது என்று மருத்துவ சோதனைகளில் உறுதி செய்யப்பட்டதையடுத்து கேரள மாநிலத்தில் அதன் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டில் நடந்தது.
இப்போது கர்நாடக அரசும் தடை செய்துள்ளது. கர்நாடகத்தின் பெல்தங்காடி, புத்தூர், பண்ட்வால் ஆகிய மாவட்டங்களில் முந்திரி பெருமளவிற்கு பயிர் செய்யப்படுகிறது. இங்கு எண்டோசல்ஃபான் பூச்சிக் கொல்லியை பயன்படுத்திய விவசாயிகளுக்கு பல உடல் கோளாறுகள் ஏற்பட்டது. அது தொடர்பான அறிக்கையையும் அரசு பெற்றது.
இந்த அறிக்கையின் மீது இன்று கர்நாடக முதல்வர் எட்டியூரப்பா தலைமையில் கூடிய அமைச்சரவை, எண்டோசல்ஃபான் பயன்பாட்டிற்குத் தடை விதிப்பதாகவும், அதன் இறக்குமதிக்கு தடை விதிக்குமாறு மத்திய அரசிற்கு பரிந்துரையும் செய்துள்ளது.
முதலில் 60 நாட்களுக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு படிப்படியாக இந்த தடை முழுமையாக நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.