28ஆம் தேதி வரை பலத்த மழை வாய்ப்பு - மழைராஜ்

சனி, 25 ஜூன் 2011 (19:17 IST)
தற்போதைய வானிலை கணிப்பின்படி 28ஆம் தேதி வரை தென் மேற்கு பருவ மழை தீவிரமடைய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் மழைராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:

ஜூன் மாதம் 11ஆம் தேதி கணிப்பின்படி தென்மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புள்ளதாகவும், இதனால் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும், ஆந்திரா, ஒரிசா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் ஜூன் 13 முதல் 21 வரை கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்திருந்தேன்.

அதேபோல், கர்நாடகம், ஆந்திரா, ஒரிசாவில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் தமிழகத்தில் சென்னை, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை மழை குறைந்திருக்கிறது.

இந்நிலையில் ஜூன் 23ஆம் தேதி கணிப்பின்படி தென்மேற்கு பருவ மழை தீவிரமடைவதால் தொடர்ந்து ஜூன் 28ஆம் தேதி வரை மேற்கண்ட பெரும்பாலான இடங்களிலும், கடலூர், புதுச்சேரி, சென்னை, சேலம், நாகை, தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் வடக்கு கேரளா, தெற்கு கர்நாடகா உட்பட கர்நாடகாவின் பெரும்பாலான பகுதிகள், வடக்கு ஆந்திரா உட்பட ஆந்திராவின் பெரும்பாலான பகுதிகள், ஒரிசாவின் பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை காலத்தில் தொடர் மழை பெய்ய வாய்ப்புள்ளதுடன் சேதம் ஏற்படுத்தும் மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

இதேபோல, புதுச்சேரி, தமிழகத்தின் கடலூர், சென்னை, வடக்கு வடமேற்கு மாவட்டங்களிலும், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, மதுரை, கோயம்புத்தூர், நீலகிரி, சேலம் மாவட்டங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தற்போது குறிப்பிட்ட பகுதிகளில் ஜூன் 28ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதுடன், செப்டம்பர் மாதம் வரை பெரும்பாலான நாட்கள் இப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. சராசரி மழையை விட இப்பகுதிகளில் 25 முதல் 50 விழுக்காடு மழை கூடுதலாக பெய்ய வாய்ப்புள்ளது.

நிலநடுக்க தேதியின் கணிப்பின்படியும், தற்போதைய வானிலை கணிப்பின்படியும் ஜூன் 26, 28 ஆகிய தேதிகளில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்