விளைநிலங்களைப் பாதுகாக்க வேண்டும் - நம்மாழ்வார்

செவ்வாய், 16 ஆகஸ்ட் 2011 (19:24 IST)
குமரி மாவட்டத்தில் விளைநிலங்களை பாதுகாக்கவேண்டும் என வலியுறுத்தி நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன் பல்வேறு அமைப்புகள் சார்பில் இன்று தர்ணா போராட்டம் நடந்தது.

இயற்கை வேளாண்மை விஞ்ஞானி நம்மாழ்வார் தலைமை வகித்தார்.

இதில் விஞ்ஞானி நம்மாழ்வார் பேசும்போது, "உலகம் முழுவதும் இயற்கை பேரிடர்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. பூமி சூடாகுதல், பருவகால மாற்றம், பனி மலை உருகுதல், கடல்மட்டம் உயர்தல், சுனாமி, நிலநடுக்கம் போன்றவை இயற்கையாக ஏற்படும் பேரிடர்கள் இல்லை.

மனிதனின் தவறான நடவடிக்கைகளாலேயே இவை ஏற்படுகின்றன. மரங்களை வெட்டுதல், காடுகளை அழித்தல், மலைகளை குடைதல் போன்ற, மனிதர்களின் தவறான நடவடிக்கைகள் காரணமாகவே இது போன்ற நிலை ஏற்படுகிறது.

குமரி மாவட்டத்தில் 52 ஆயிரம் ஹெக்டேர் நன்செய் நிலங்கள் இருந்தன. தற்போது 17 ஆயிரம் ஹெக்டேராக குறைந்துள்ளது. விளை நிலங்களை விவசாயம் அல்லாத தேவைகளுக்கு பயன்படுத்துவது சட்டவிரோதம்.

எனவே இதை தடுக்க மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்" என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்