தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு - மழைராஜ்

செவ்வாய், 9 ஆகஸ்ட் 2011 (20:57 IST)
தற்போதைய வானிலை கணிப்பின்படி தமிழகத்தின் வட மாவட்டங்களிலும், தென் தமிழகத்தின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு செய்துவரும் மழைராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:

ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி வானிலை கணிப்பின்படி தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒரிஸாவை மையமாகக் கொண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் ஆந்திரா, ஒரிஸா, மேற்கு வங்கம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஆகஸ்ட் 22 வரை பெரும்பாலான நாட்கள் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், சேலம், நீலகிரி, புதுச்சேரி உட்பட பெரும்பாலான வட மாவட்டங்களிலும், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களிலும், தென் தமிழகத்தின் சில பகுதிகளிலும் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாகை, தஞ்சை உட்பட காவிரி டெல்டா மாவட்டங்களிலும், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர் உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

ஏற்கனவே குறிப்பிட்டது போல், தென்மேற்கு பருவ மழையை பொறுத்தவரை அரபிக் கடல் பகுதியை விட வங்கக் கடல் பகுதியில் கூடுதல் மழை பெய்யும் எனத் தெரிவித்திருந்தேன். கடந்த இரண்டு மாதம் தென்மேற்கு பருவ மழை எதிர்பார்த்த அளவைவிட குறைவாகப் பெய்திருந்தாலும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஆந்திரா, ஒரிஸா, மேற்கு வங்கம், உள்ளிட்ட சில மாநிலங்களில் வரலாறு காணாத மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையிலும் கடந்த சில வருடங்களில் இல்லாத அளவிற்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. வானிலை மற்றும் நிலநடுக்க கணப்பின்படி உலக அளவில் ஏதாவது ஒரு இடத்தில் 7.5 ரிக்டர் அளவில் ஆகஸ்ட் 12ஆம் தேதி பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்