கடந்த மே 17ஆம் தேதி வெப்துனியாவிற்கு அனுப்பிய கடிதத்தில் மே 22 வரை தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருந்தேன். மே 21 வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. ஒரு சில இடங்களில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் வாழை விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மே 19ஆம் தேதி பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தேன். 20ஆம் தேதி அதிகாலை இத்தாலி நாட்டில் 6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தது.
மே 23ஆம் தேதி கணிப்பின்படி தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நாகை, கடலூரை மையமாக கொண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புள்ளது. இதனால் கடலூர், பாண்டிச்சேரி, நாகை, மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்கள், விழுப்புரம், சென்னை, நெல்லை, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, தருமபுரி, சேலம் உள்பட பல்வேறு பகுதிகளில் மே 25 அல்லது 26 முதல் 29 வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதால் வடக்கு கேரளா மற்றும் கர்நாடாகவில் பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. ஆந்திராவிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. வானிலை மற்றும் நிலநடுக்க தேதி கணிப்பின்படி மே 28 அல்லது ஜூன் 5ஆம் தேதி பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள தேதியாகும்.