2010 – ராஜபக்ச சந்தித்த தலைக்குனிவு

செவ்வாய், 28 டிசம்பர் 2010 (18:53 IST)
FILE
‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்று கூறி, நாடுகளுக்கு இடையே போர் நடந்தால் கூட பயன்படுத்தக் கூடாது என்று உலக அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட கொத்துக் குண்டுகள், வெப்பக் குண்டுகள், வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் ஆகியவற்றை தன் நாட்டு மக்கள் மீது வீசி, இரண்டரை ஆண்டுகளில் ஒன்றரை இலட்சம் தமிழர்களை கொன்றொழித்த இனப் படுகொலை அரசின் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு இந்த ஆண்டில் பல முனைகளில் தலைகுனிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

2009ஆம் ஆண்டு மே 16,17,18ஆம் தேதிகளில் மட்டும் 50 ஆயிரம் தமிழர்களை கொன்று குவித்து போரை முடித்த மகிந்த ராஜபக்சவுக்கு, உலகத்தை அதிர்ச்சியுறச் செய்த இந்த படுகொலையை தடையின்றி நடத்தி முடிக்க தனக்கு உதவிய தெற்காசிய வல்லரசுகளான இந்தியாவும், சீனாவும், தடை செய்யப்பட்ட ஆயுதங்களை வழங்கி ஆதரவளித்த இரஷ்யாவும் அளிக்கும் ஆதரவு மட்டும் தன்னையும், தனது நாட்டையும் காத்திட போதுமானது அல்ல என்று உணரவைத்த ஆண்டு இது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச் சலுகை இழப்பு

“உங்கள் நாட்டு மக்கள் மீது தொடுத்த யுத்தத்தில் நடந்த போர்க் குற்றங்களை முறையாக விசாரிக்க பன்னாட்டு விசாரணைக்கு ஒப்புக் கொள்ள வேண்டும்” என்று 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றத்தின் தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமின்றி, தங்களுடைய கோரிக்கை ஏற்கப்படவில்லையெனில், 6 மாத காலத்தில் இலங்கையின் உற்பத்திப் பொருட்களின் இறக்குமதி மீது விதிக்கப்படும் தீர்வைக்கு தாங்கள் அளித்துவரும் மானியத்தை நிறுத்துவோம் என்று அறிவித்தது. ஏனெனில், எந்த ஒரு மூன்றாம் உலக நாட்டிற்கும் இப்படிப்பட்ட இறக்குமதி தீர்வைச் சலுகை அளிப்பதற்கு ஐரோப்பிய ஆணையம் விதித்துள்ள நிபந்தனைகளில் முக்கியமானது, அந்த நாட்டில் ஜனநாயகம் இருக்க வேண்டும், மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே.

சிங்கள பேரினவாதம் என்பதைத் தவிர ஜனநாயகம் என்ற ஒன்றை மருந்திற்கும் அறியாத சிறிலங்க அரசியல்வாதிகளுக்கு, மனித உரிமை என்பது சிங்கள மக்கள் உரிமை என்பதைத் தவிர வேறு என்ன தெரியும்? எனவே எதிர்பார்த்தைப் போல் ஐரோப்பிய ஒன்றிய எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாது என்று ராஜபக்ச மறுக்க, அந்நாட்டின் ஏற்றுமதிக்கு, குறிப்பாக ஆயத்த ஆடைகள் ஏற்றுமதிக்கு அளித்துவந்த தீர்வை மானியத்தை இரத்து செய்வதாக ஐரோப்பிய ஆணையம் அறிவித்தது.

இந்த முடிவை மேற்கொள்வதற்கு முன்னர், அது தொடர்பாக தன்னளவில் ஒரு பெரும் விசாரணையை நடத்தியது ஐரோப்பிய ஒன்றியம். ஐரோப்பிய ஆணையத்தின் வர்த்தக பேச்சாளர் கிரிஸ்டியன் ஹோமான் இவ்வாறு கூறினார்; “இலங்கையில் நிலவும் மனித உரிமை சூழல் குறித்து விரிவாக புலனாய்வு செய்தோம். குறிப்பாக, ஜி.எஸ்.பி.+ வரிச் சலுகையை பெறுவதற்கு அடிப்படையான பன்னாட்டு மனித உரிமை தரங்களை மதிப்பது என்று அளித்த உறுதிமொழியை சிறிலங்க அரசு பாதுகாக்கிறதா என்று பார்த்தோம். சிறிலங்க அரசு இந்த விடயத்தில் மிகவும் பின்தங்கியுள்ளதையே விசாரணை அறிக்கை காட்டுகிறது” என்று தெளிவாக விளக்கிய பிறகே இறுதி அறிவிப்பை வெளியிட்டது.

இலங்கைக்கு ஆண்டிற்கு சராசரியாக 3.47 பில்லியன் டாலர்கள் அளவிற்கு அந்நியச் செலாவணியை கொண்டு வருவது ஆயத்த ஆடை ஏற்றுமதியே. இதற்கு அடுத்த இடத்தில் 1.2 பில்லியன் டாலர்கள் அளவிற்கு தேயிலை ஏற்றுமதி இருக்கிறது. இவைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அளிக்கும் தீர்வை மானியம் மட்டும் 100 மில்லியன் டாலர்களுக்கு மேல்! இதனை இழந்துள்ளதால் ஏற்றுமதியை இழந்துள்ளது இலங்கை.

இன்றைக்கு அந்நாட்டின் வர்த்தகப் பேரவையின் தலைவர், ஏற்றுமதியை அதிகரிக்க அரசு ஏதாவது செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த நிலை நீடித்தால் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இழப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் நிறைவேற்றியபோது, எங்களுடைய நடவடிக்கையின் மீது வினா எழுப்ப இவர்கள் யார் என்று திமிராக கேட்ட சிறிலங்க அரசியல்வாதிகள், இப்போது ‘எங்களுக்கு பதில் அளிக்க ஒரு வாய்ப்புத் தாருங்கள்’ என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்ற வாசலில் குனிந்து கொண்டு கோரிக்கை விடுக்கிறார்கள்!

தமிழக மக்கள் முறியடித்த ஐஃபா விழா

உலகமே போர்க் குற்றவாளி என்று விரல் நீட்டி குற்றஞ்சாட்டிவந்த நிலையிலும் வாரியணைத்து வாழ்த்திட அருகே இந்தியா இருக்க கவலை ஏன்? என்று இருமாந்திருந்த அதிபர் மகிந்த ராஜபக்ச, தனது நாட்டை அமைதிப் பூமியாக காட்டவும், அதன் மூலம் கிழந்து தொங்கிக் கிடக்கும் தனது நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த சுற்றுலாவைப் பெருக்கவும் திட்டமிட்டு, மும்பையின் திரை நட்சத்திரங்களை வைத்து ஒரு பெரும் விழாவை நடத்தி உலகத்தின் பார்வை திசை திருப்ப முயன்றார். அதுவே இந்தியா சர்வதேச திரைப்பட விழா (India International Film Festival - IIFA) ஐஃபா.

இந்தித் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்துவரும் அமிதாப் பச்சனை ஐஃபா விழாவின் தூதராக வைத்து அவர் ஆட முற்பட்ட பன்னாட்டு ஏமாற்று நாடகத்தை உரிய நேரத்தில் உணர்ந்த தமிழ் உணர்வாளர்கள், அதற்கு எதிரான ஒரு பெரும் பிரச்சார திட்டத்தை உருவாக்கி, சென்னையிலும், மும்பையிலும் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்த, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதித்த அமிதாப்பும், அவருடைய மகன் அபிஷேக் பச்சனும், அவரது மனைவி ஐஸ்வர்யா ராயும் ஐஃபா விழாவை புறக்கணிப்பதாக அறிவித்தனர். தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள திரையுலகத்தினரும் புறக்கணித்தனர். ஐஃபா விழாவில் கலந்துகொள்ளும் நடிகர், நடிகைகளின் திரைப்படங்கள் தென்னாட்டில் திரையிட அனுமதிக்க முடியாது என்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அறிவிக்க, சில இந்தி நடிகர், நடிகைகளின் துணையுடன் நடந்த ஐஃபா விழா படுதோல்வியில் முடிந்தது.

FILE
அது மட்டுமல்ல, அந்த விழாவை ஒட்டி, இந்தியாவின் தொழில் வர்த்தக அமைப்புகளின் கூட்டமைப்பான ஃபிக்கியின் முழு ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட உலக வர்த்தக மாநாடும் தோல்வியில் முடிந்தது. இது சிறிலங்க அரசிற்கு அவமானத்தையும், பெரும் நிதியிழப்பையும் ஏற்படுத்தியது மட்டமின்றி, தமிழ்நாட்டின் எதிர்ப்பு எத்தனை வலிமையானது என்பதை சிறிலங்க அரசுத் தலைமைக்கு உணர்த்தியது.

ஐ.நா.அவையில் கேட்பதற்கு யாருமில்ல

ஆனாலும் தனது பெருமையை இந்திய, சீன எல்லையைத் தாண்டி நிலைநாட்டுவதில் முனைப்பாக இருந்த மகிந்த ராஜபக்ச, ஐ.நா.அவையில் உரையாற்றக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள மிகுந்த பிரயாசையுடன் நியூ யார்க்கிற்குப் புறப்பட்டார். அன்றைய தினம், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பேசிய பிறகு ராஜபக்ச பேச வேண்டும். ஒபாமா பேசியபோது உலக நாடுகளின் தூதர்கள் அனைவரும் அவையில் இருந்து கவனத்துடன் கேட்டனர். அவர் பேசி முடித்துவிட்டு வெளியேறியதும், அடுத்துப் பேச ராஜபக்ச மேடையேறியபோது, அவையே காலியாக இருந்தது. அப்போதுதான் ராஜபக்சாவிற்கு தனது ‘பெரும’ சர்வதேச அளவில் எந்த அளவிற்கு கொடி கட்டிப் பறக்கிறது என்பது.

அதன் பிறகு உலகத் தலைவர்கள் பலரை தான் அளித்த விருந்திற்கு அழைப்பு விடுத்தார். வந்தவர் ஒரே ஒருவர்தான், அவர் ஈரான் அதிபர் அஹமதிநேஜாத். அவரும் 20 நிமிடம் இருந்துவிட்டு வெளியேறினார். இவரை எந்த ஊடகமும் திரும்பிப் பார்க்கவில்லை, அவ்வளவு புகழ்!

உலகப் புகழ் பெற்ற லண்டன் விஜயம்!

உலக நாடுகளில் எந்த ஒரு தலைவருக்கும் இப்படி ஒரு வரவேற்பை சந்தித்திருக்க மாட்டார்கள். விமான நிலையத்திலிருந்து தங்கும் விடுதிக்குச் சென்று, வேறு எங்கும் தலை காட்ட முடியாமல், தனது நாட்டுத் தூதரகத்தில் பாதுகாப்பாக அடைக்கலம் புகுந்து, பிறகு பங்கேற்க வந்த நிகழ்ச்சியும் இரத்து செய்யப்பட்டு, மீண்டும் விமான நிலையத்திற்கு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டு நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்ட பெருமை மகிந்த ராஜபக்சவிற்கு மட்டுமே கிடைத்தது.

‘எங்கள் இனத்தை அழித்தொழித்த இனப் படுகொலையாளனை ஆக்ஸ்போர்டில் பேச அனுமதிக்க மாட்டோம’ என்று கூறி, ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த பல பத்தாயிரக்கணக்கான தமிழர்கள், லண்டனில் நிலவிய கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், இரவு பகல் பாராமல் ஆர்ப்பாட்டம் நடத்தியது இங்கிலாந்திலும், ஐரோப்பாவிலும் மட்டுமின்றி, உலக நாடுகளிடையே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்களின் போராட்டத்தின் நியாயத்தை உலகம் மேலும் ஆழமாக உணர வைத்தது.

பெண்கள், குழ்ந்தைகள், பெரியவர்கள் என்று அந்தக் குளிரில் வீட்டில் முடங்கிக்கிடக்க வேண்டியவர்களெல்லாம் ஒன்று திரண்டு நடத்திய ஆர்ப்பாட்டம், ராஜபக்சவை தலை குனிய வைத்தது.

தெற்காசிய வல்லரசுகள் தனக்கு பாதுகாப்பாக இருக்கின்றன. அந்த ஆதரவு போதும், அவைகளைத் தாண்டி எந்த வல்லரசும் அல்லது ஐ.நா.வும் தன்னை நெருங்கிவிட முடியாது என்ற நினைத்திருந்த மகிந்த ராஜபக்சவை, இந்த ஓராண்டில் தமிழர்கள் துரத்தி, துரத்தி தமிழினப் படுகொலைக்கு நியாயம் கோரியது அவர்களின் விடுதலை போராட்டத்தில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

தங்கள் நியாயமான போராட்டத்தை அழிக்க முற்பட்ட அரச பயங்கரவாதத்தை எதிர்த்து அவர்கள் ஆயுதம் ஏந்திப் போராடியபோது, உலக நாட்டு அரசுகளின் துணையுடன் அதனை பயங்கரவாதமாக சித்தரிக்க முடிந்த மகிந்த ராஜபக்ச அரசிற்கும், அதற்கு துணை நின்ற இந்திய, சீன வல்லாதிக்கங்களுக்கும், நிராயுதபாணியாக தமிழ் மக்கள் ஒன்று திரண்டு நடத்திய ஆர்ப்பாட்டங்களை, போராட்டங்களை எதிர்கொள்ளவும் முடியவில்லை, பதில் கூறவும் இயலவில்லை!

தமிழர்களின் நியாயமான விடுதலைப் போராட்டம் என்பது ஆயுதங்களையும், அரசுகளையும் விட வலிமையானது என்பது இந்த ஆண்டில் நிரூபணமானது.

வெப்துனியாவைப் படிக்கவும்