கொரோனாவால் ஒரு மாத கேப்: மீண்டும் பணிக்கு திரும்பிய ஜான்சன்!!

திங்கள், 27 ஏப்ரல் 2020 (14:18 IST)
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஒரு மாத இடைவேளைக்கு பின்னர் இன்று பணிக்கு திரும்பினார்.
 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, இங்கிலாந்து உட்பட அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்தது. தற்போது இந்த நிலையில் இருந்து இந்த நாடுகள் மீண்டு வருகின்றன. 
 
இந்நிலையில் இங்கிலாந்தின் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருந்தது. இதனையடுத்து இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டில் இருந்தே வீடியோ கான்பரன்ஸ் மூலம் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டு அரசை நடத்தி வந்தார். 
 
ஆனால் அவர் உடல்நிலை மோசமானதை அடுத்து அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கே மூன்று நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.
 
அதன் பின்னர் எடுத்த சிகிச்சைகளில் அவர் குணமானதை அடுத்து தனது இல்லத்தில் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து முற்றிலுமாக மீண்ட பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஒரு மாத இடைவேளைக்கு பின்னர் இன்று மீண்டும் பணிக்கு திரும்பினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்