தமிழ் சினிமா Rewind: 2023 ஆம் ஆண்டின் டாப் 10 ஓடிடி ஹிட்ஸ்!

வெள்ளி, 29 டிசம்பர் 2023 (12:39 IST)
ஓடிடிகளின் வரவு தமிழ் சினிமாவின் போக்கை பெருமளவு மாற்றியுள்ளது. சினிமாவின் வியாபாரத்தை குறிப்பிடத்தக்க அளவுக்கு விரிவடைய வைத்துள்ளது. ஓடிடிகள் காரணமாக திரையரங்குகளில் வெளியாகி போதுமான கவனம் பெறாத சிறு பட்ஜெட்டில் உருவான தரமான படங்கள் கூட அதிகளவில் ரசிகர்களை சென்று சேர்கின்றன. திரையரங்கில் வெளியிட முடியாத படங்கள் மற்றும் தொடர்கள் நேரடியாக ஓடிடியில்யே வெளியாக தொடங்கியுள்ளன. அப்படி இந்த ஆண்டில் ஓடிடியில் பெரும் வரவேற்பைப் பெற்ற 10 படைப்புகளைப் பற்றிய ஒரு பார்வை.

இறுகப் பற்று
            விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் இறுகப் பற்று. எலி, தெனாலி ராமன் உள்ளிட்ட படங்களை இயக்கிய யுவ்ராஜ் தயாளன் இந்த படத்தை இயக்கியுள்ளார். பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் அக்டோபர் 6 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. திருமணத்துக்குப் பிறகு தம்பதிகளுக்குள் ஏற்படும் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு உருவான இந்தத் திரைப்படம் திரையரங்கில் பெரியளவில் கவனம் பெறவில்லை என்றாலும், ஓடிடியில் ரிலீஸான பின்னர் பரவலான கவனிப்பையும், விவாதங்களையும் உருவாக்கியது. ரத்தம் பாயும் ஆக்‌ஷன் படங்களுக்கு மத்தியில் உணர்வு ரீதியான படைப்பாக உருவான இந்த திரைப்படம் பெருவாரியான ரசிகர்களுக்கு பிடித்த ஒரு படமாக அமைந்தது.



தண்டட்டி
            பசுபதி மற்றும் ரோகினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்த தண்டட்டி படத்தை ராம் சங்கையா இயக்கியிருந்தார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. கே எஸ் சுந்தரமூர்த்தி இசையமைத்த இந்த படத்தில் மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் விவேக் பிரசன்னா மற்றும் ரோகினி ஆகியோர் நடித்திருந்தனர். 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்ற திரைப்படமாக அமைந்தது தண்டட்டி. இன்றைய கிராமப்புற வாழ்வை இயல்பாக சொல்லியதாக விமர்சகர்கள் பாராட்டி இருந்தனர்.  ஆனால் இந்த திரைப்படம் திரையரங்கில் மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லை. அதன் பின்னர் ஓடிடியில் ரிலீஸான போதுதான் பரவலான கவனத்தைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.



அயோத்தி
            சசிகுமார், புகழ், ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் மந்திரமூர்த்தி இயக்கத்தில் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்த ‘அயோத்தி’ திரைப்படம் மார்ச் மாதம் ரிலீஸ் ஆனது. அயோத்தியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு புனிதப் பயணம் வரும் ஒரு குடும்பத்தில் நடக்கும் இறப்பு மற்றும் அது சம்மந்தமான பிரச்சனைகளை மனிதம் கலந்து சொல்லி இருக்கும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. மத நல்லிணக்கம் மற்றும் இறுதிச் சடங்குகளில் தனிநபர் உரிமை என முற்போக்கு கருத்துகளை பிரச்சாரமின்றி சொன்ன வகையில் இந்த படம் திரையரங்கிலேயே போதுமான கவனத்தைப் பெற்றது. ஆனால் அதன் பின்னர் ஓடிடியில் ரிலீஸான போது மிகப்பெரிய அளவில் ரசிகர்களை சென்று சேர்ந்தது. பல விருது விழாக்களிலும் கலந்துகொண்டு விருதுகளை தட்டிச் சென்றது.



குட்னைட்
மே மாதம் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது பீல்குட் படமான குட்னைட். பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீஸான இந்த படம் பலரது பாராட்டுகளையும்  குவித்தது. இந்த படத்தில் ஜெய்பீம் புகழ் மணிகண்டன், ரமேஷ் திலக், பாலாஜி சக்தவேல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கியிருந்தார். தூங்கும்போது சத்தமாக குறட்டைவிட்டு அடுத்தவர்கள் தொந்தரவு செய்யும்  மோகன், என்ற கதாபாத்திரத்தில் மணிகண்டன் நடிக்க, அந்த பிரச்சனையால், அவர் தன்னுடைய வாழ்க்கையில் அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கதைக்களனாக கொண்டு மெல்லுணர்ச்சி வகைக் கதையாக படத்தை உருவாக்கி இருந்தார் இயக்குனர். திரையரங்கிலேயே பெரும் வெற்றி பெற்ற இந்த திரைப்படம் ஓடிடியிலும் ஹிட்டடித்தது.



ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10 ஆம் தேதி ரிலீஸான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகிய இருவரும் நடித்துள்ளனர். இருவருக்கும் சம அளவில் முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்பராஜ். படம் 1975களில்  நடப்பதாக உருவாக்கப் பட்டு இருந்தது. வனங்களில் இருந்து பழங்குடி மக்களை வெளியேற்றும் அரசியல் பற்றி சிறப்பாக பேசியிருந்த இந்த திரைப்படம் பாராட்டுகளைப் பெற்றது. கூடுதலாக சினிமா எனும் ஆயுதத்தின் வலிமை குறித்தும் படம் பேசியிருந்தது சினிமா ஆர்வலர்களை மேலும் இந்த படத்தோடு ஒன்ற வைத்தது. தியேட்டரில் ஹிட்டடித்த இந்த திரைப்படம் ஓடிடியில் சூப்பர் ஹிட் அடித்தது.



தி ஹண்ட் ஃபார் வீரப்பன்
            2000களில் இந்தியாவை மிரள செய்த ஒரு பெயர் வீரப்பன். தமிழக – கர்நாடக எல்லையில் உள்ள கோபிநத்தம் கிராமத்தில் பிறந்த வீரப்பன் யானை தந்தம் கடத்தல், சந்தன கடத்தல் என பல குற்ற செயல்கள் புரிந்ததோடு, பல காவல்துறை, வனத்துறை அதிகாரிகளையும் கொன்றதற்காக தேடப்பட்டு கொல்லப்பட்ட ஒரு நபர். இன்று வரையில் வீரப்பனின் கதை சர்ச்சைக்குரிய ஒரு கதையாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் “The hunt for veerappan” என்ற தொடர் நெட்பிளிக்ஸில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த தொடர் நேர்த்தியான உருவாக்கத்துக்காக கவனத்தை ஈர்த்தாலும் வீரப்பன் தேடுதல் வேட்டையின் ஒருபக்கமான காவல்துறை பக்கத்தின் குரலை பதிவு செய்ததாக விமர்சனங்களையும் பெற்றது.



கூச முனிசாமி வீரப்பன்
            தி ஹண்ட் ஃபார் வீரப்பன் தொடரின் எதிர்க்குரலாக வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்ட மக்களின் குரலையும், வீரப்பன் குரலையும் பதிவு செய்யும் விதமாக நக்கீரன் உருவாக்கத்தில் ஜி 5 தளத்தில் வெளியான ‘கூச முனிசாமி வீரப்பன்’ தொடர் அமைந்தது. இந்த தொடர் வீரப்பன் உயிரோடு இருந்த போது அவரை நக்கீரன் குழுவினர் சந்தித்து எடுத்த வீடியோ பேட்டிகளை கொண்டு உருவாக்கபட்டு இருந்தது. இந்த தொடரில் வொர்க்‌ஷாப்புகளில் மக்கள் எப்படி கொடுமையான துன்பங்களை அனுபவித்தார்கள் என்பது குறித்த மறு உருவாக்கப்பட்ட காட்சிகள் பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினர். அதுபோல நகைச்சுவை ததும்ப தனது கதையை விவரிக்கும் வீரப்பனின் பேச்சுமுறையும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.


லேபிள்
            ஜெய் மற்றும் தன்யா ஹோப் ஆகியோர் நடிப்பில் இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் வடசென்னையை மையப்படுத்திய வெப் தொடராக லேபிள் தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி கவனம் பெற்றது. வடசென்னை பகுதி மீது பொதுபிம்பமாக குத்தப்பட்ட லேபிளை மாற்றுவதற்காக ஜெய் போராடுவதும், அந்த லேபிளேயே சென்று சிக்கிக்கொள்ளும் இளைஞர்களின் வாழ்க்கைப் போராட்டத்தையும் விரிவாக பேசி இருந்த இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.


கூழாங்கல்
இயக்குனர் வினோத்ராஜ் இயக்கத்தில் உருவான கூழாங்கல் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது ரௌடி பிக்சர்ஸ்க்காக வாங்கி வெளியிட்டார். இந்த படம் முதலில் சர்வதேச திரைப்பட விழாக்களில் எல்லாம் ரிலீஸாகிக் கொண்டு இருக்கிறது. ரோட்டர்டாம் விழாவில் புலி விருதுக்கான போட்டி பட்டியலில் கலந்துகொண்டு விருதினைப் பெற்றது. இந்நிலையில் இந்தியாவின் சார்பில் ஆஸ்கருக்கு செல்லும் படமாக கூழாங்கல் அனுப்பப்பட்டது. ஆனால் ஆஸ்கர் போட்டியின் இறுதிப்பட்டியலில் கூழாங்கல் திரைப்படம் இடம்பெறவில்லை.  இந்நிலையில் இந்த படம் இரண்டு ஆண்டுகளாக ரிலீஸாகாமல் இருந்த இந்த திரைப்படம் இப்போது சோனி லைவ் ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸ் ஆனது. விருது விழாக்களில் கலந்துகொண்ட போதே இந்த படத்துக்கு மிகப்பெரிய கவனம் கிடைத்த நிலையில் ஓடிடியில் ரிலீஸான பிறகு பரவலான பார்வையாளர்களை சென்றடைந்தது. முக்கியப் படைப்பாளர்களான வெற்றிமாறன், மணிரத்னம் மற்றும் இயக்குனர் ராம் ஆகியோர் பாராட்டிய இந்த ஆண்டின் சிறந்த படைப்புகளில் ஒன்றாக அமைந்தது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்