வாட்ஸ் அப் மூலம் பேச அனுமதிக்க முடியாது: நளினி, முருகன் கோரிக்கை குறித்து தமிழக அரசு

வியாழன், 28 மே 2020 (13:00 IST)
வாட்ஸ் அப் மூலம் பேச அனுமதிக்க முடியாது
வெளிநாடு வாழ் உறவினர்களிடம் வாட்ஸ் அப் மூலம் நளினி, முருகன் ஆகியோர்களை பேச அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் அவர்கள் இருவரும் இந்தியாவுக்குள் பேச அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் சிறைத்துறை தெரிவித்துள்ளது
 
முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள நளினி மற்றும் முருகன் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினியின் தாயார் பத்மா வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கில் நளினி, முருகன் ஆகிய இருவரும் இலங்கையில் உள்ள முருகனின் தாயார் சோமனியம்மாளிடம் தினமும் 10 நிமிடம் வாட்ஸ் அப் வீடியோ காலில் பேச அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். மேலும் முருகனின் தங்கை லண்டனில் உள்ள நிலையில் அவர் தனது தங்கையுடன் பேச அனுமதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்
 
இந்த மனுமீதான விசாரணை சமீபத்தில் நடந்தபோது ’வாட்ஸ்அப் காலில் பேசுவதற்கு அனுமதிப்பதில் என்ன பிரச்சினை உள்ளது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வெளிநாடு வாழ் உறவினர்களிடம்  வாட்ஸ் அப் மூலம் நளினி, முருகனை பேச அனுமதிக்க முடியாது என்றும், இந்தியாவுக்குள் மட்டும் பேச அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்