வன்முறைகளின் கூடாரமா ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ்? – வலுக்கும் எதிர்ப்புகள்!

வியாழன், 2 ஜூலை 2020 (14:32 IST)
சாத்தான்குளம் கொலை வழக்கில் ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பில் உள்ளவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர்களுக்கு எதிர்ப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

சாத்தான்குளம் செல்போன் கடை உரிமையாளர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ராஜ் ஆகியோரை போலீஸார் விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் அவர்கள் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தாமாக முன் வந்து விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை மாஜிஸ்திரேட் அறிக்கை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையை வைத்து உடனடி விசாரணையை மேற்கொள்ள சிபிசிஐடிக்கு உத்தரவிட்டது.

அதன்படி கொலைவழக்கு பதிவு செய்யப்பட்டு 6 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் ப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பில் உள்ளவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற அமைப்பு சமுதாய சேவையின் நோக்கில் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். இதில் உள்ளவர்கள் சாதாரண உள்ளூர் இளைஞர்கள் ஆவர். மக்கள் தொகைக்கு ஏற்ப காவலர்கள் இல்லாத நிலையில் சில குறிப்பிட்ட பணிகளில் ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினர் உதவியுடன் காவல்துறை செயல்படுகிறது.

உதாரணமாக திருவிழாக்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த, பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளில் உதவ மற்றும் ரோந்து பணிகளிலும் ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸில் இணையும் இளைஞர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆனால் ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸில் உள்ளவர்களுக்கு காவலர்களுக்கு உண்டான அதிகாரங்கள், உரிமைகள் கிடையாது. மக்களுக்கும் காவல்துறைக்கும் இடையேயான தொடர்பு பாலமாக ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு கருதப்படுகிறது.

இந்நிலையில் சாத்தான்குளம் சம்பவத்தில் போலீஸாருடன் ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸுக்கும் குற்ற செயலில் சம்பந்தம் உள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் பலர் கூறி வருகின்றனர். இந்நிலையில் பல இடங்களில் பொதுமக்களிடம் ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸில் உள்ளவர்கள் அத்துமீறியுள்ளதாக சமூக வலைதளங்களில் கருத்துகளை பலர் தெரிவித்து வருகின்றனர்.

காவல்துறைக்கு நெருக்கமாக இருப்பதை சாதகமாக பயன்படுத்தி ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸில் உள்ள பலர் தங்களுக்கு வேண்டாதவர்களை மிரட்டுதல், காவலர்களை வைத்து பஞ்சாயத்து செய்தல் போன்ற நடவடிக்கையிலும் ஈடுபட்டதாக பேச்சுகள் எழ தொடங்கியுள்ளன. சிலர் இந்த ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பையே கலைக்க வேண்டும் எனவும் கூற தொடங்கியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்