பம்பரம் சின்னம்..! நாளைக்குள் முடிவு.! தேர்தல் ஆணையத்துக்கு கெடு..!!

Senthil Velan

செவ்வாய், 26 மார்ச் 2024 (16:15 IST)
பம்பரம் சின்னம் கோரி மதிமுக அளித்த விண்ணப்பத்தின் மீது  நாளை காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
மக்களவைத் தேர்தலில்  பம்பரம் சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு அளித்த மனுவை பரிசீலிக்க கோரி  மதிமுக சார்பில் பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில்,  வேட்புமனு தாக்கல் செய்ய மூன்று தினங்களே உள்ள நிலையில் இன்னும் தங்கள் மனுவை தேர்தல் ஆணையம் பரிசீலிக்கவிலை என குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென வழக்கறிஞர் முரளி முறையீடு செய்தார்.  அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட  தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கபூர்வாலா, மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, வழக்கை இன்று விசாரித்தனர். பம்பரம் சின்னம் பொதுச் சின்னம் பட்டியலில் உள்ளதா என்பது குறித்து பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 
சட்டப்படி இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் பட்சத்தில் பம்பரம் சின்னம் வழங்கப்படும் என்றும் பம்பரம் சின்னம் ஒதுக்க கோரிய மதிமுகவின் கோரிக்கை இன்றே பரிசீலிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதை அடுத்து இந்த வழக்கு விசாரணையை பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ALSO READ: சில்லறை கட்சிகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது..! அண்ணாமலைக்கு டி.ஆர்.பி ராஜா பதிலடி..!!!!

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது பம்பரம் சின்னம் கோரி மதிமுக அளித்த விண்ணப்பத்தின் மீது  நாளை காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நாளை பிற்பகல் 2.15 மணிக்கு தள்ளி வைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்