இசை மேதை என்னியோ மரிக்கோனி காலமானார்; பிரபலங்கள் அஞ்சலி!

திங்கள், 6 ஜூலை 2020 (14:07 IST)
இத்தாலிய இசை மேதையும், ஆஸ்கர் விருது வென்றவருமான என்னியோ மரிக்கோனி உடல்நல குறைவால் இன்று காலமானார்.

இத்தாலியை பூர்வீகமாக கொண்ட இசை மேதை என்னியோ மரிக்கோனி தனது 16 வயதிலிருந்து இசையமைப்பதை தனது வாழ்க்கையாக மாற்றி கொண்டவர். தொடர்ந்து பல இத்தாலிய படங்களுக்கும் இசை அமைத்திருந்தாலும் அவரை உலகம் முழுவதும் பிரபலமடைய செய்தது “டாலர்ஸ் ட்ரைலாஜி” எனப்படும் மூன்று வைல்ட் வெஸ்ட் படங்கள்தான்.

செர்ஜியோ லியோன் இயக்கத்தில் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் நடித்த இந்த மூன்று படங்களுக்கு என்னியோ மரிக்கோனி அமைத்த இசை தொகுப்புகள் இன்றளவும் உலகம் முழுவதும் பல நிகழ்ச்சிகளிலும் திரும்ப திரும்ப வாசிக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன. இதுதவிட ஹாலிவிட்டில் சினிமா பாரடைஸ், க்வெண்டின் டொரண்டினோவின் ஹேட்ஃபுல் எயிட் போன்ற படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

தனது கடைசி காலம் வரை இசையமைத்து கொண்டே இருந்த என்னியோ மரிக்கோனி ஹேட்ஃபுல் எயிட் இசைக்காக ஒரு முறையும், கௌரவ விருதாக ஒருமுறையும் என இரண்டு முறை ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளார். 500க்கும் மேற்பட்ட படங்களுக்கு, தொலைக்காட்சி தொடர்களுக்கு இசையமைத்துள்ள எனியோ மரிக்கோனி தனது 91 வயதில் இன்று இத்தாலியில் உயிரிழந்தார்.

அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இத்தாலி பிரதமர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பல நாட்டு இசையமைப்பாளர்களுக்கும் பெரும் உத்வேகம் அளிப்பவராய் இருந்த என்னியோ மரிக்கோனிக்கு இரங்கல் தெரிவித்து தமிழ் சினிமாவிலும் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பதிவிட்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்