பாரிஸ் ஜெயராஜ்: திரை விமர்சனம்

சனி, 13 பிப்ரவரி 2021 (11:52 IST)
நடிகர்கள்: சந்தானம், அனைகா சோடி, சஷ்டிகா, பிருத்விராஜ், மொட்டை ராஜேந்திரன், டைகர் தங்கதுரை; இசை: சந்தோஷ் நாராயணன்; ஒளிப்பதிவு: ஆர்தர் கே வில்சன்; இயக்கம்: ஜான்சன். கே.
 
சந்தானம் நடித்து ஜான்சன் இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிந்த ஏ 1 படம் வெற்றிபெற்றதையடுத்து, அதே குழு மீண்டும் இப்போது ஒன்றாக களமிறங்கியிருக்கும் படம்தான் பாரிஸ் ஜெயராஜ்.
 
பாரீஸ் பகுதியில் கானா பாடகராக இருக்கும் ஜெயராஜின் (சந்தானம்) முதல் காதல் தோல்வியில் முடிந்துவிட, அந்த தருணத்தில் அறிமுகமாகும் திவ்யாவைக் (அனைகா) காதலிக்க ஆரம்பிக்கிறார். முதலில் இந்தக் காதலுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஜெயராஜின் தந்தை (பிருத்விராஜ்), பிறகு கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கிறார். திவ்யாவின் தந்தையும் இந்தக் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார். ஜெயராஜின் காதலை முதலில் ஆதரித்த தந்தை, பிறகு எதிர்ப்பது ஏன், இந்த எதிர்ப்புகளை மீறி ஜோடி இணைந்ததா என்பது மீதிக் கதை.
 
'ஏ 1'ல் இருந்த கலகலப்பும் டெம்போவும் இந்தப் படத்திலும் இருக்குமென எதிர்ப்பார்த்துச் சென்றால் சற்று ஏமாற்றம் ஏற்படுகிறது. அதற்கு முக்கியமான காரணம், படத்தின் முற்பாதியில் எவ்வளவோ முயற்சித்தும் காமெடி பெரிய அளவுக்கு எடுபடாததுதான். நடுநடுவே சில ஒன் - லைன்கள் மட்டும் புன்னகைக்க வைக்கின்றன. ஆனால், படத்தின் பிற்பகுதியில் இதனைச் சற்று சரி செய்திருக்கிறார்கள். இடைவேளைக்குப் பிறகு நகைச்சுவைக் காட்சிகளும் திரைக்கதையும் வேகமெடுப்பதால், பிற்பகுதி கலகலப்பாகவே நகர்கிறது.
 
படத்தில் கதாநாயகன் கானா பாடகர் என்பதால் எல்லாப் பாடல்களுமே அதே பாணியில் இடம்பெற்றிருக்கின்றன. முந்தைய படங்களிலேயே தனக்கென ஒரு நடன பாணியை சந்தானம் உருவாக்கியிருந்தார். அதே பாணியில் நடனமும் பாடல்களும் இருப்பதால் பாடல்கள் ஜாலியாகவே நகர்கின்றன.
 
இந்தப் படத்தில் கதாநாயகன் சந்தானம்தான் என்றாலும் அவரது தந்தையாக வரும் பாத்திரத்திற்குத்தான் கூடுதல் முக்கியத்துவம் இருக்கிறது. அந்தப் பாத்திரத்தில் நடித்திருக்கும் பிருத்விராஜ், அதற்கேற்றபடி நடித்திருக்கிறார். மொட்டை ராஜேந்திரன் - டைகர் தங்கதுரை வரும் காட்சிகள் பிரதான கதையிலிருந்து சற்று விலகியிருந்தாலும், சிரிக்க வைக்கின்றன.
 
படத்தின் முற்பாதியில் சற்று கவனம் செலுத்தியிருந்தால் மீண்டும் ஒரு 'ஏ 1' கிடைத்திருக்கும். இருந்தாலும் பிற்பாதிக்காக பார்த்துவைக்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்