அமெரிக்காவுடன் சேர்ந்து இந்தியா மேற்கொள்ளும் கடற்படைப் பயிற்சி: சீனாவுக்கு செய்தி?

வியாழன், 23 ஜூலை 2020 (14:36 IST)
லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் பதற்றம் நிலவும் இந்தச் சூழ்நிலையில், இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்திய அமெரிக்க கடற்படைகள் கூட்டுப் பயிற்சிகள் மேற்கொண்டது சீனாவுக்கு மறைமுக எச்சரிக்கையை விடுப்பதற்கா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அந்தமான், நிக்கோபார் தீவுகளுக்கு அருகே இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்திய கடற்படையின் 'கிழக்கு பிரிவு' ஏற்கனவே அங்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியக் கடற்படை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், இந்த பயிற்சி உண்மையில் 'பாஸேஜ் பயிற்சியின்' ஒரு பகுதியாகும், இதைக் கடற்படை அவ்வப்போது மற்ற நாடுகளின் கடற்படைகளுடன் செய்து வருகிறது என்று தெரிவித்தார்.

அமெரிக்க போர்க்கப்பல்களில் மிகப்பெரியதான 'யுஎஸ்எஸ் நிமிட்ஸ்' இந்தியப் பெருங்கடல் வழியாகச் சென்று கொண்டிருந்தது, இந்த நேரத்தில் இரு நாடுகளின் கடற்படைகளும் இந்தக் கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டன என அவர் கூறுகிறார்.

கடந்த காலங்களில், இந்திய கடற்படை, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் கடற்படைகளுடன் இதேபோன்ற பயிற்சிகளை மேற்கொண்டதாக அவர் கூறுகிறார்.

வர்த்தகப் போக்குவரத்துத் தடமாக விளங்குவதால், இந்தியப் பெருங்கடலின் இந்த பகுதி மிகவும் முக்கியமானது என்று பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் கூறுகிறார்கள். அமெரிக்கா போன்ற பல சக்திவாய்ந்த நாடுகளும் தங்களது போர்க்கப்பல்களைத் தென் சீனக் கடலுக்கு இந்த வழியாக அனுப்புகின்றன. அத்தகைய சூழ்நிலையில், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அவர்களுக்கு தந்திரோபாய முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் கூறப்படுகிறது

முதல் அமெரிக்க கடற்படையின் ஏழாவது கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வான் பாதுகாப்பு தவிர மேம்பட்ட பயிற்சிக்கும் இது உதவியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளதாக பிபிசிக்கு அளித்த பேட்டியில் தந்திரோபாய விவகார நிபுணர் சுஷாந்த் சரீன் தெரிவித்தார்.

மேலும் இந்த பயிற்சியானது இரு நாடுகளின் படைகளின் திறனை அதிகரிக்கும் என்றும், இதனால் கடல் வழி ஆபத்து அல்லது கொள்ளை மற்றும் பயங்கரவாதத்தை ஒன்றாக எதிர்த்துப் போராட முடியும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்திய கடற்படை, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் இணைந்து மேற்கு வங்காள வளைகுடாவில் கூட்டுப் பயிற்சியை மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவிக்கிறது.

இது போன்ற நடைமுறைக்கு, பொதுவாக, இந்தியாவில் எதிர்ப்புக் குரல்கள் எதிரொலிக்கத் தொடங்கும். ஆனால் கல்வான் பள்ளத்தாக்கில் சீனா ஆக்கிரமிப்பு செய்ய முயன்றதை அடுத்து, மக்கள் இத்தகைய நடைமுறையை வரவேற்றுள்ளனர்.

"பாதுகாப்புத் துறையைப் பொருத்தவரை, இந்தியா - அமெரிக்கா இடையே நெருக்கம் வளர்ந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. அமெரிக்காவுடன் இந்தியாவும் பல பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. இதன் கீழ் இந்தியாவும் அமெரிக்காவிலிருந்து நீர்மூழ்கிக் கப்பல்களை எதிர்த்துப் போராடுவதற்கான தொழில்நுட்பத்தைப் பெறுகிறது." என்று சுஷாந்த் சரீன் கூறுகிறார்.

ஒவ்வொரு நாட்டிற்கும் இந்தியப் பெருங்கடல் முக்கியமானது. குறிப்பாக, தென் சீனக் கடல் மீது சீனா தனது அதிகாரத்தை உறுதிப்படுத்த முயற்சிக்கும் சூழலில், அமெரிக்கா மற்றும் பிற சக்திவாய்ந்த நாடுகளின் போர்க்கப்பல்கள் அங்கு செல்ல இந்தியப் பெருங்கடல் மிகவும் முக்கியமானது.

இந்த ராணுவ பயிற்சி மூலம் இந்தியா விடுக்க விரும்பும் செய்தி என்ன?

'தென் சீனக் கடல் பகுதியில் சீனாவும் தனது அழுத்தத்தை அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு, இந்திய கடற்படை இந்தோனீசியா அருகே, சீனப் போர்க்கப்பல்களை எதிர்க்கும் சவாலை சந்தித்தது. அதன் பின்னர் சீனக்கப்பல்கள் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.' என்று சரீன் கூறுகிறார்.

'இந்தியா தற்போது எந்தவொரு அணியிலும் இல்லை', அதாவது, இந்தியா அணிசேராக் கொள்கையைத் தொடர்ந்து பின்பற்றி வருகிறது. வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கரும் 'இந்தியா எந்த கூட்டணியிலும் அங்கம் வகிக்கவில்லை' என்று அழுத்தமாக கூறியுள்ளார்.

இருப்பினும், சீனாவுடனான அண்மைக்கால மோதல் நிலைக்குப் பிறகு, முன்பை விட மற்ற நாடுகளுடன் தந்திரோபாய உறவுகளை வலுப்படுத்துவதில் இந்தியா அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. அமெரிக்க கடற்படையுடனான இந்தக் கூட்டுப்பயிற்சியும் அதன் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது.

ஆனால், 'இதுபோன்ற ஒரு பயிற்சியைச் செய்வதன் மூலம், இந்தியா தனியாக இல்லை என்றும் அமெரிக்காவும் அதனுடன் துணை நிற்கிறது என்றும் இந்தியா சீனாவிற்கு செய்தி அனுப்பவிரும்புவதாகவே தாம் கருதுவதாக பாதுகாப்புத் துறை வல்லுநர் ராகுல் பேடி கூறுகிறார்.

1991-92-ல் இருந்தே அமெரிக்காவும் இந்தியாவும் கூட்டாக ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக ராகுல் பேடி கூறுகிறார்.

கார்கில் போரின் போதும், அமெரிக்கா இந்தியாவுக்குத் துணை நின்றது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த பயிற்சியால் வேறு எந்தப் பெரிய பயனும் இருக்க முடியாது என்று பேடி நம்புகிறார், ஏனெனில் 'இந்தியாவின் முக்கிய கவனம் எல்லைக் கோட்டில் தான். ஆனால் அங்கு சீனா தனது ராணுவ பலத்தைக் கூட்டி வருகிறது. அதே போல சீனக் கடற்படை மிகவும் வலுவானது. போர்க்கப்பல்களை அழிக்க பல நீண்ட தூர ஏவுகணைகளையும் அந்நாடு உருவாக்கியுள்ளது என்று ராகுல் பேடி கூறுகிறார்.

இருப்பினும், இந்தியப் பெருங்கடலில் இந்தியாவும் தனது கடற்படை பலத்தை அதிகரித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்