துப்பாக்கியுடன் அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த பெண்
சனி, 9 ஜூலை 2016 (11:23 IST)
அமெரிக்காவில் கறுப்பு இனத்தவரை காவல் துறையினர் சுட்டுக் கொன்ற சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆப்பிரிக்க இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது கலவரம் வெடித்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஐந்து அதிகாரிகள் கொல்லப்பட்டனர். ஆறு பேர் காயம் அடைந்தனர். இதனையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் பெண் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்ததாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் உடனடியாக நாடாளுமன்றம் மூடப்பட்டு காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பின்னர் அங்கு யாரும் இல்லை என்பதை உறுதி செய்து பின்னர் நாடாளுமன்றம் திறக்கப்பட்டது. கருப்பினத்தவர் பிரச்சனை அமெரிக்காவில் தீவிரமடைந்து வருவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.