போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஜூன் ஐந்தாம் தேதி சர்வதேச விண்வெளி மையம் சென்றனர். அங்கிருந்து ஆய்வு நடத்திவிட்டு பூமிக்கு திரும்பும் நிலையில் அவர்கள் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்துவிசை கருவியில் ஏற்பட்ட கோளாறால் இருவரும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, 8 நாள் பயணம் 8 மாதமாக நீட்டிக்கப்பட்டது.
தற்போது 110 நாட்களுக்கு மேலாக சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் விண்வெளி மையத்தில் தவித்து வருகின்றனர். அவர்களை அழைத்து வர நாசா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை நாடியது.
இந்த நிலையில், நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இணைந்து சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை மீட்பதற்கான க்ரூ-9 செல்லும் விண்கலம் இன்று இரவு 10.47 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது.