நூறு மரணத்தின் வலியை சந்தித்த 16 வயது சிறுமி: கண்ணீர் பேட்டி!

செவ்வாய், 25 ஜூலை 2017 (13:44 IST)
ஈராக்கில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 16 வயது சிறுமி தொடர்ந்து ஆறு மாதங்களாக தினமும் பாலியல் வற்புறுத்தலுக்கு ஆளானதாக கண்ணீர் மல்க கூறியுள்ளார்.


 
 
ஈராக்கின் வடக்கு பகுதியை சேர்ந்த எக்லஸ் என்ற சிறுமி 14 வயதில் ஒரு தீவிரவாத அமைப்பால் கடத்தப்பட்டார். அவருடன் சேர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களும் அப்போது கடத்தப்பட்டனர்.
 
அப்போது அந்த சிறுமியின் கண் முன்னே அவரது தந்தை உட்பட பலரை தீவிரவாதிகள் கொலை செய்தனர். பின்னர் அந்த சிறுமி உட்பட மேலும் சில 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளையும் அவர்கள் மற்றொரு தீவிரவாத கும்பலுக்கு விற்றுள்ளனர்.
 
அந்த தீவிரவாத கும்பலில் உள்ள ஒருவன் இந்த சிறுமியை கொடூரமான முறையில் தினமும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். ஆறு மாதமாக தொடர்ந்து அந்த சிறுமிக்கு பாலியல் சித்திரவதை கொடுத்து வந்துள்ளான் அந்த தீவிரவாதி.
 
அவன் எப்பொழுது வெளியேச் சண்டை போட செல்வான் என காத்திருந்த அந்த சிறுமி சரியான நேரம் பார்த்து அவன் சண்டைக்கு வெளியே சென்றதும் அங்கிருந்து தப்பித்து வந்துள்ளார்.
 
இது தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பித்த நான் ஜெர்மனியில் தங்குவதற்கு அமெரிக்காவை சேர்ந்த வழக்கறிஞர் உதவியதாக கூறினார்.
 
மேலும் எனக்கு தற்போது வயது 16 தான் ஆகிறது. நான் பாறையை போல வலுவாக இருப்பேன் என பலரும் நினைக்கலாம். ஆனால் எனக்குள் இருக்கும் வலி 100 மரணத்திற்கு சமம் என கண்ணீர் மல்க கூறினார் அந்த சிறுமி.

வெப்துனியாவைப் படிக்கவும்