நாடு கடத்தலாம் ஆனால் 6 மாதம் ஆகும் – விஜய் மல்லையா வழக்கில் புது சிக்கல் ?
புதன், 12 டிசம்பர் 2018 (09:30 IST)
நாடுகடத்த இங்கிலாந்து நீதிமன்றத்தால் அனுமதி அளிக்கப்பட்ட விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு அழைத்து வருவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பல்வேறு பொதுத் துறை வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு அதைத் திருப்பி கட்டாமல் லண்டனுக்குத் தப்பியோடினார் கிங் ஃபிஷர் நிறுவன முதலாளி விஜய் மல்லையா.இதனால் இந்திய வங்கிகளின் நிதிநிலை பெரிதாகப் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் மீது பலப் பிரிவுகளில் வழக்குத் தொடரப்பட்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
அவரின் மீதான வழக்கைத் தற்போது சி பி ஐ விசாரித்து வருகிறது. மேலும் லண்டலிலும் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு நடைபெற்று வருகிறது. அவரது 13,900 கோடி சொத்துகளையும் அமலாக்கப்பிரிவு முடக்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்கு வரமறுக்கும் அவரை தலைமறைவு பொருளாதாரக் குற்றவாளி குற்றவாளியாக இந்தியா அறிவித்துள்ளது.
தற்போது லண்டனில் பதுங்கியுள்ள இவரை இந்தியாக் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள சிபிஐ, விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பாக, இந்தியா தரப்பில் லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு விசாரணை கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சிபிஐ, மத்திய அமலாக்கத் துறை ஆகியவை ஒன்றிணைந்து நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவுக்கு எதிராக 150 பக்கங்கள் கொண்ட ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளன.
இந்த வழக்கின் கடைசி கட்ட விசாரணை கடந்த தின இரு தினங்களுக்கு முன்னால் முடிவடைந்து தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பில் விஜய் மல்லையாவை நாடுகடத்த அனுமதி அளிக்கப்பட்டது. அதனால் விரைவில் விஜய் மல்லையாக் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் அவரைக் கைது செய்ய இன்னும் 6 மாத காலம் வரை ஆகலாம எனக் கூறப்படுகிறது.
விஜய் மல்லையாவுக்கு எதிரான இந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர், லண்டன் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய விஜய் மல்லையாவுக்கு 14 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் அதுவரை அவரை கைது செய்ய முடியாது. அவர் தொடர்ந்து ஜாமீனிலேயே இருக்கலாம்.
ஒருவேளை ஐகோர்ட்டு உத்தரவு விஜய் மல்லையாவுக்கு எதிராக வந்தாலும் கூட அவரால் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடியும். அப்போது இந்த வழக்கு விசாரணை மேலும் 6 மாதங்கள் வரை நீடிக்கும். எனவே விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு மேலும் பல மாதங்கள் வரை ஆகலாம் எனத் தெரிகிறது.