உலக சினிமா - Remember

செவ்வாய், 31 மே 2016 (12:37 IST)
இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாசிப் படைகள் நடத்திய அழிவுகளை பின்னணியாக வைத்து நூற்றுக்கணக்கில் படங்கள் வந்துள்ளன.


 


வருடந்தோறும் இரண்டு டஜன் படங்களாவது இந்த வரலாற்றுப் பின்னணியில் வந்து கொண்டிருக்கின்றன. நாசிப் படை உருவாக்கிய அழிவுகளின் தாக்கத்தை சொல்ல இன்னும் பல நூறு படங்கள் தேவைப்படும். 
 
இரண்டாம் உலகப் போரில் யூதர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களையும், அதன் விளைவுகளையும் வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களை தேடிப் பார்க்கையில், மனித மனதின் குரூரத்தையும், அதனை காட்சிப்படுத்தும் கலைஞர்களின் நுட்பமான கலையுணர்வையும் ஒருசேர அறிந்து கொள்ள முடிகிறது. 2015 -இல் வெளிவந்த ரிமம்பர் திரைப்படம் நாசிக்கள் ஏற்படுத்திய அழிவின் சாம்பலில் இருந்து உயிர்பெறுகிறது.
 
ரிமம்பர் ஒரு கனடியன் - ஜெர்மன் திரைப்படம். ஆனால் கதை நடப்பது யுஎஸ்ஸில். சில காட்சிகள் கனடாவில். 
 
ஜெர்மன் நாடோ, நாசிக்களோ, இரண்டாம் உலகப் போர் காலகட்டமோ படத்தில் வருவதில்லை.
 
யுஎஸ்ஸில் உள்ள நர்சிங் ஹோம் ஒன்றில் மேக்ஸ், செவ் என்று இரண்டு நண்பர்கள் இருக்கிறார்கள். 
 
வயதானவர்கள். மேக்ஸால் சக்கர நாற்காலி இல்லாமல் நகர முடியாது. ஆஸ்துமா வேறு. செவ் மறதி நோயால் பீடிக்கப்பட்டவர். தூங்கி எழுந்ததும் அவருக்கு சகலமும் மறந்து போகும். தனது மனைவி ரூத்தை தேடத் தொடங்குவார். பிறகு செவிலியோ அல்லது மேக்ஸோ, அவரது மனைவி கேன்சரால் இறந்துவிட்டதை ஞாபகப்படுத்த வேண்டும். 
 
மேக்ஸ், செவ் இருவருமே ஜெர்மனில் உள்ள ஆஸ்விட்ச் வதை முகாமில் இருந்த யூதர்கள். ஆஸ்விட்ச் வதை முகாம் புகழ்பெற்றது. பல்வேறு இடங்களில் பிடிக்கப்பட்ட யூதர்கள் இங்குதான் கைதியாக அழைத்து வரப்பட்டு, வேலைக்கு, ஆராய்ச்சிக்கு என்று தரம்பிரிக்கப்பட்டார்கள். மற்றவர்கள் விஷ வாயு செலுத்தி சாகடிக்கப்பட்டார்கள். 
 
1944 -இல் ரஷ்ய படைகளின் ஆதிக்கம் ஆஸ்விட்சை நெருங்கிய போது, நாசி அதிகாரிகள் விஷ வாயு கூடங்களை குண்டுகள் வைத்து தகர்த்தனர். பலர் தங்களது அடையாளங்களை மாற்றி யூதர்களின் அடையாளங்களில் ஒளிந்து கொண்டனர். அப்படி, மேக்ஸ், செவ் ஆகியோரது குடும்பத்தை கொன்றழித்த ஆஸ்விட்ச் அதிகாரி ஓட்டோ வாலிஸ் தற்போது ரூடி கொர்லாண்டர் என்ற பெயரில் யுஎஸ்ஸில் வசித்து வருவதை மேக்ஸ் கண்டுபிடிக்கிறார். 
 
மொத்தம் 4 ரூடி கொர்லாண்டர்கள்  இருக்கிறார்கள். அதில் யார் அவர்களது குடும்பத்தை கொன்றவர் என்பதை அறிந்து கொண்டு அவரை பழி வாங்க வேண்டும் என்று இரு கிழவர்களும் முடிவெடுக்கிறார்கள்.

பழிவாங்குதல் என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அடக்கப்பட்டு கிடக்கும் மிருகம். சந்தர்ப்பம் வரும்போது அது விழித்துக் கொள்ளும். இங்கு சாகப் போற வயதில் இரு கிழவர்களிடம் அந்த மிருகம் விழித்தெழுகிறது. 


 

 
மேக்ஸால் அந்தப் பணியை செய்ய முடியாது. எழுந்து நடமாடும் திறனுடன் இருப்பவர் செவ். ஆனால், தூங்கி எழுந்தால் அவருக்கு அனைத்தும் மறந்துவிடும். மேக்ஸ் சக்கர நாற்காலியில் முடங்கியிருந்தாலும், அவரது மூளை இன்னும் சுறுசுறுப்பாக உலவிக் கொண்டிருக்கிறது. செவ்வுக்கு அவரைப் பற்றியும், அவரது நோக்கம் பற்றியும் ஒரு நீண்ட கடிதத்தை எழுதி செவ்விடம் தருகிறார். தூங்கி எழுந்ததும் அதனை படித்து அவரைப் பற்றிய நினைவை மீட்டுக் கொள்ளலாம். பயணத்துக்கான பணம், பயண திட்டம் அனைத்தையும் மேக்ஸே மேற்கொள்கிறார். ஒருநாள் செவ் நர்சிங் ஹோமைவிட்டு ஐம்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட தனது பழைய எதிரியை தேடி புறப்படுகிறார்.
 
செவ்வின் தேடல்தான் ரிமம்பர். தேடலின் முடிவில் அவர் ஓட்டோ வாலிஸை கண்டு பிடிக்கிறார். ஆனால் அது பெரும் அதிர்ச்சியை தருவதாக இருக்கிறது.  
 
ரிமம்பர் திரைப்படத்தை Atom Egoyan இயக்கியுள்ளார். செவ்வாக வரும் கிறிஸ்டோபர் பிளம்பரின் நடிப்பு படத்துக்கு கூடுதல் சோபையை தருகிறது. 
 
வலிமையற்றவன் மீதான அடக்குமுறையைப் போல் கொடுமையானது எதுவுமில்லை. அப்பாவிகளின் ரத்தமும், கண்ணீரும் அதற்கு காரணமானவர்களை எங்கிருந்தாலும் தேடிக் கொல்லும். அது பௌதிகமான கொலையாகவும் இருக்கலாம், குற்றவுணர்வில் குமைந்து தினம் தினம் செத்தெழுவதாகவும் இருக்கலாம். கலையானது சிந்தப்பட்ட ரத்தத்தின் சூடு குறையாமலும், கண்ணீரின் உவர்ப்பு குறையாமலும் பார்த்துக் கொள்ளும்.

வெப்துனியாவைப் படிக்கவும்