நான் 2010–ம் ஆண்டு எக்கோ நிறுவனத்தின் மீதும், அதன் உரிமையாளர் மீதும் காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். சட்டத்துக்கு புறம்பாக என் பாடல்களை விற்பனை செய்வதாக அளித்த புகாரின் அடிப்படையில் சி.டி.க்களை பறிமுதல் செய்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அந்த குற்றவியல் நடவடிக்கை வழக்கை ரத்து செய்யக்கோரி அவர்கள் தொடுத்த வழக்கின் தீர்ப்பே நேற்று வெளிவந்தது.
அதில் நீதியரசர், எக்கோ நிறுவனத்தின் மீதான குற்றவியல் நடவடிக்கையை மட்டுமே ரத்து செய்துள்ளார். அதில் எனது காப்புரிமை செல்லாது என அறிவிக்கவில்லை. இந்த வழக்குக்கும் எனது பாடல்களின் உரிமை மீதான வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஒரு சில செய்தி நிறுவனங்கள் இளையராஜா பாடல்கள் வழக்கு ரத்து என்றும், சில இளையராஜா காப்புரிமை வழக்கு தள்ளுபடி என்றும் முன்னுக்கு பின் முரணான செய்திகளை வெளியிடுகின்றனர்.