சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஆஸ்தான புகைப்பட கலைஞராக இருந்த ஸ்டில் போட்டோகிராஃபர் சிவா தொலைக்காட்சி படப்பிடிப்பு ஒன்றுக்காக தேனி சென்றிருந்தார். படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிக் கொண்டிருந்தபோது அவர் சென்ற கார் திடீரென விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் கேமராமேன் சிவா சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். இவருடன் பயணம் செய்த நடிகர் தவசி என்பவர் படுகாயம் அடைந்தார். இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், கொம்பன், ரஜினி முருகன் உள்பட பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த விபத்துக்கு முழுமுதல் காரணம் காரை ஓட்டிய நடிகர் தவசிதான் காரணம் என ஸ்டில்ஸ் சிவாவின் மகன் குற்றம் சாட்டியுள்ளார். சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் ‘ காரை ஓட்டிய நடிகர் தவசி குடிபோதையில் இருந்துள்ளார். அவருடன் செல்ல என் தந்தை பயந்ததாக படப்பிடிப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆனாலும் அவரை வலுக்கட்டாயமாக தவசி காரில் அழைத்துச் சென்றுள்ளார். மேலும் தவசிக்கு சரியாகக் காரை ஓட்டத் தெரியாது எனவும் சிலர் சொல்கின்றனர். என் தந்தையின் இறப்புக்கு முழுமுதற்காரணம் அந்த தவசிதான்’ என அவர் கூறியுள்ளார்.