மாஸா? தமாஸா?.... மைக் மோகனின் ஹரா டிரைலர் எப்படி?

vinoth

திங்கள், 27 மே 2024 (11:29 IST)
கன்னடத்தில் இருந்து தமிழ் மொழிக்கு வந்த மோகன் மெல்லிய காதல் படங்களில் நடித்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர். 80 களில் அவர் நடித்த பல படங்கள் 175 நாட்களைக் கடந்து ஓடி சாதனைப் படைத்ததால் சில்வர் ஜூப்ளி ஸ்டார் என்ற அடைமொழியோடு வலம் வந்தார். ஆனால் 90 களுக்கு பிறகு அவர் பார்முலா படங்களுக்கு வரவேற்பு இல்லாமல் போனது. அதனால் அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார்.

கடைசியாக அவர் நடித்த சுட்டப்பழம் திரைப்படம் வெளியாகியே 13 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்நிலையில் இப்போது அவர் ஒரு புதுப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள படத்துக்கு ஹரா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தாதா 89 படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ இயக்கியுள்ளார். இந்த படத்தில் குஷ்பு மோகனுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. தனது இளமைக் காலத்திலேயே மென்மையான கதாநாயகனாக நடித்து வந்த மோகன் இப்போது முதல் முறையாக முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஹீரோவாக இந்த படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படம் பற்றி சமீபத்தில் பேசிய நடிகர் மோகன் ‘ஹரா’ திரைப்படம் ஜூன் 7 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. மோகனுக்கு மாஸ் பில்டப் கொடுக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. மோகன் தன்னுடைய பீக்கில் இருந்தபோதே ஆக்‌ஷன் கதைகளில் நடித்ததில்லை என்பதால் இந்த ஆக்‌ஷன் அவதாராம் எடுபடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்