ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை விலக்கக்கோரி தமிழக அளவில் போராட்டம் நடந்து வருகிறது. காவிரி உள்ளிட்ட தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்கு நடிகர் சங்கம் போராடாது என்று அறிவித்தவர்கள், மாணவர்களின், பொதுமக்களின் எழுச்சிகண்டு, மௌனப்போராட்டத்தை அறிவித்தனர். அதன்படி இன்று நடிகர் சங்க வளாகத்தில் மௌனப்போராட்டம் நடந்து வருகிறது. அஜித், த்ரிஷா உள்ளிட்டவர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
நடிகர்கள் ஒரு போராட்டம் நடத்தினால் மொத்த மீடியாக்களும் அங்குதான் குவிந்திருக்கும். இப்போது மெரினாவில் கூடியிருக்கும் கூட்டம் நடிகர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும். முதல்முறையாக, நடிகர் சங்க போராட்டத்தை எந்த சேனலும் நேரலை ஒளிபரப்பு செய்யக்கூடாது என்று இதுவரை நடிகர்களின் போராட்டத்தை வேடிக்கைப் பார்த்த இளைஞர்கள் எச்சரித்தனர்.
நடிகர் சங்கமும், எந்த தொலைக்காட்சியும் எங்கள் போராட்டத்தை ஒளிபரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது. சேனல்கள் போராட்டம் நடக்கும் நடிகர் சங்க வளாகத்தில் அனுமதிக்கப்படவில்லை. நேரலை ஒளிபரப்பு இல்லாததால் நடிகர் சங்கத்தின் போராட்டம் களையிழந்து காணப்படுகிறது.