இந்த தொடரில் ஈழத் தமிழர் போராட்ட இயக்கங்களை கொச்சையாகவும், மலினாகவும் சித்தரித்துள்ளதாக தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்தனர். இந்நிலையில் இது சம்மந்தமாக தமிழின் மூத்த இயக்குனர்களில் ஒருவரான பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழீழப் போராளிகளின் விடுதலை போராட்டக்களத்தையும், அவர்களின் வரலாற்றையும் அறியாத, தகுதியற்ற நபர்களால், தமிழின விரோதிகளால் இத்தொடர் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை தொடரின் காட்சிகள் உணர்த்துகின்றன. அறமும் வீரமும் தன்னலமற்ற ஈகமும் செறிந்த போராட்ட வரலாற்றை கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடும் தமிழினத்தின் மீது மிகுந்த வன்மத்தோடும் தொடரை உருவாக்கியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
இத் தொடரை உடனே நிறுத்த மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் மாண்புமிகு திரு.பிரகாஷ் ஜவடேகர் உத்தரவிடவேண்டும். இத்தொடரில் தமிழ் , முஸ்லீம் , வங்காளி என குறிப்பிட்ட இனமக்களுக்கு எதிரான மன நிலையோடு
தொடர்ச்சியாக எடுக்கப்படுவதை அனைவரும் அறிவீர்கள்.
தி பேமிலி மேன் 2 தொடரை ஒளிபரப்பும் அமேசான் நிறுவனம் தாமாக முன்வந்து உடனடியாக ஒளிபரப்பை நிறுத்த வேண்டும். எங்கள் வேண்டுகோளை புறக்கணித்து தொடர்ந்து OTT தளத்தில் வெளிவந்தால் அமேசான் நிறுவனத்தின் அனைத்து விதமான வர்த்தகத்தையும் புறக்கணிக்கும் போராட்டத்தில் உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழர்கள் பங்கெடுப்பதை தவிர்க்கவோ தடுக்கவோ இயலாது என்பதை
கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். எனக் கூறியுள்ளார்.