லயோலா கல்லூரியில் படித்த எஸ்.ஜே.சூர்யாவுக்கு, உதவி இயக்குநராக வேண்டும் என்பது ஆசை. ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜாவின் உதவியாளர் ஒருவரைப் பிடித்து, ‘கிழக்குச் சீமையிலே’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குச் சென்றுவிட்டார். முதன்முதலில் ஒருநாள் க்ளாப் போர்டை அடிக்க எஸ்.ஜே.சூர்யா தயாராக இருந்தபோது, ‘நீ யாருடா க்ளாப் போர்டு அடிக்க?’ என்று கேட்டு, எஸ்.ஜே.சூர்யாவை அடித்திருக்கிறார்.
கீழே விழுந்தவருக்கு, தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியிருக்கிறது. பதறிப்போன பாரதிராஜா. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கச் சொல்லியிருக்கிறார். உடல்நலம் தேறிவந்த எஸ்.ஜே.சூர்யாவை, சேவல் சண்டை போடுபவராக நடிக்க வைத்தார் பாரதிராஜா. நேற்று நடந்த ஒரு விழாவில் இதை நினைவுகூர்ந்த பாரதிராஜா, ‘இறைவி’ படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அபாரம் எனப் பாராட்டினார்.