கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்தது. இதையடுத்து விடுதலை இரண்டாம் பாகம் கடந்த 20 ஆம் தேதி வெளியாகி பாராட்டுகளையும் நல்ல வசூலையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தை விமர்சித்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் “நக்சல் தீவிரவாதத்தை நியாயப்படுத்தியும், பெருமைப்படுத்தியும் வெளியாகியிருக்கின்ற விடுதலை திரைப்பட குழுவினர் மீது உபா பாய வேண்டும். முக்கியமாக. அதை வெளியிட்டிருக்கின்ற ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மீதும், ஆயுதம் தாங்கிய பயங்கரவாதத்தை சகஜப்படுத்துகின்ற இந்தத் திரைப்படத்தின் மீது என்.ஐ.ஏ கவனம் செலுத்த வேண்டும்.
காவல் துறையின் விசாரணை காவல் கொடுமைகளை அம்பலப்படுத்தும் மறைவில் நக்சல்வாதத்தையும் கவுரவப்படுத்துகிறார் திரைப்படத்தின் இயக்குநர். திரையரங்கை பிரசார மேடையாக மாற்றி, தமிழக இளைஞர்கள் மத்தியில் பயங்கரவாதிகளை கதாநாயகன் ஆக்குகிறார்” எனத் தெரிவித்திருந்தார்.