ஊரடங்கு காரணமான வெளியாகமல் இருக்கும் ஜோதிகாவின் பொன்மகள் வந்தால் திரைப்படத்தை அமேசான் ப்ரைமில் நேரடியாக ரிலீஸ் செய்யக் கூடாது என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதையடுத்து சூர்யா மற்றும் ஜோதிகா நடிக்கும் திரைப்படங்கள், 2டி தயாரிப்பில் வரும் படம் என எதையும் திரையரங்கில் ரிலிஸ் செய்ய முடியாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா ரிலிஸுக்கு தயாராக உள்ள சூரரை போற்று திரைப்படம் சிக்கலில் மாட்டிக்கொண்டு உள்ளது.
இந்நிலையில் சூர்யாவுக்கு ஆதரவாக 30 தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் ‘இந்த நிலையில் OTT தளத்தில் திரைப்படங்கள் வெளியாவது குறித்துத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களான இயக்குநர் பாரதிராஜா, K.முரளிதரன், T.சிவா, K.S.ஸ்ரீனிவாசன், K.ராஜன், K.E.ஞானவேல் ராஜா, H.முரளி, K.விஜயகுமார், சித்ரா லக்ஷ்மணன், S.S.துரைராஜ், FEFSI சிவா, YNOT S.சஷிகாந்த், G.தனஞ்செயன், S.R.பிரபு, ராஜசேகர் பாண்டியன், JSK.சதீஷ்குமார், C.V.குமார், சுதன் சுந்தரம் (PASSION STUDIOS), சுரேஷ் காமாட்சி, இயக்குநர் மனோபாலா, S.நந்தகோபால், Auraa Cinemaas மகேஷ், R.K.சுரேஷ், வினோத் குமார், P.S.ரகுநாதன், லிப்ரா ரவீந்திரன், P.ரங்கநாதன், M.S.முருகராஜ், Dr. பிரபு திலக், ‘கின்னஸ்’ பாபு கணேஷ் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில் ’தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் OTT ப்ளாட்பார்ம்களின் மூலமாக படங்களை ரிலிஸ் செய்வது அனைத்து நாடுகளிலும் நடந்து வருகிறது. அந்த தளங்கள் சிறு ம்ற்றும் குறு பட்ஜெட் தயாரிப்பாளர்களின் படங்களை ரிலிஸ் செய்ய முன் வந்திருப்பது பாராட்டத்தக்கது. இவ்வாறு படங்கள் வெளியாவதால் திரையரங்குகளில் படங்கள் வெளியாவதற்காக காத்திருக்கும் படங்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும். மேலும் முதலீடு செய்யும் ஒரு தயாரிப்பாளருக்கு அந்தப் படத்தை எல்லா விதங்களிலும், சட்டப்படி வியாபாரம் செய்ய அனைத்து உரிமையும் உள்ளது என்று தற்போது திரைப்படங்கள் எடுத்துவரும் தயாரிப்பாளர்களாகிய நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.
திரைப்படத் துறை வளமாக இயங்க அனைத்து தரப்பினரும் (தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள்) ஒருங்கிணைத்து பணியாற்ற வேண்டும், முடிவுகளை எடுக்க வேண்டும். தனிப்பட்ட எந்த சங்கமும் தன்னிச்சையாக எந்த ஒரு தயாரிப்பாளரையும் பாதிக்கும் முடிவுகளை எடுத்து அறிவிக்க வேண்டாம் என்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறோம். ஊரடங்கு முடிந்தவுடன் அனைத்து தரப்பினரும் ஒன்றுகூடி இந்த OTT ப்ளாட்பார்ம்கள் தொடர்பான வரைமுறைகளை வகுத்துக்கொள்ளவேண்டும். ’ எனக் கூறியுள்ளனர்.