காமன்வெல்த் மல்யுத்தம்: இந்தியாவின் அல்கா டோமர் அபார வெற்றி!

வெள்ளி, 8 அக்டோபர் 2010 (17:58 IST)
புதுடெல்லியில் நடைபெற்றுவரும் 19வது காமன்வெல்த் போட்டிகளில் சற்றுமுன் நடந்த 54 கி.கி. மல்யுத்தப் போட்டியில், கனடா வீராங்கனையே டோனியா வெர்பிக் ஒரு நிமிடத்திற்குள் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார் இந்தியாவின் அல்கா டோமர்.

போட்டி துவங்கியதும், கனடா நாட்டு வீராங்கனை டோனியா வெர்பிக் கடுமையாக மோதினார். அல்கா சற்றும் அசராமல் எதிர் தாக்குதல் யுக்தியைக் கையாளும் தந்திரத்துடன், எதிர் போட்டியாளருக்கு பிடி கொடுக்காமலேயே மோதினார்.

ஒரு கட்டத்தில் டோமரின் காலை பிடிக்க கனடா வீராங்கனை முயல, அவரை அப்படியே அழுத்தித் திருப்பினார். இதனால் ஒரு புள்ளி கிடைத்த்து.

போட்டி தொடர்ந்தபோது, மிக வேகமாக அல்காவின் காலைப் பற்றிய டோனியா அவரை புரட்டிப்போட்டார், இதற்கு அவருக்கு இரண்டு புள்ளிகள் கிடைத்தது. ஆனால், அடுத்த நொடியில் அவருடைய காலைப் பற்றி, தனது முதுகால் அவரை அழுத்திப் பிடித்து திருப்பினார் டோமர். முழு பலத்தையும் பிரயோகம் செய்து, டோனியாவை அழுத்த, அவருடைய தோள்பட்டை மேட்டில் பதிந்தது. இந்திய பயிற்சியாளர்களும், மற்றவர்களும் சற்றும் எதிர்பாராத வகையில் அல்கா டோமர் மிக வேகமாக வெற்றி பெற்றார்.

இப்போட்டியில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், கனடா வீராங்கனை டோனியா வெர்பிக் ஒலிம்பிக் போட்டியில் வெங்கலப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்தது. காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவிற்குக் கிடைத்துள்ள 18வது தங்கப் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நடந்த ஹாக்கி போட்டியில் டிரினிடாட் அண்ட் டொபாக்கோ நாட்டு அணியை 7-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வென்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்