மாயமான மலேசிய விமானத்தின் புதிரை முடிவுக்கு கொண்டு வருவோம் - ஆஸ்திரேலிய பிரதமர்
வியாழன், 27 மார்ச் 2014 (09:58 IST)
மாயமான மலேசிய விமானத்தின் புதிரை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் தெரிவித்துள்ளார். மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் எங்களிடம் உள்ள அனைத்து தொழில்நுட்பங்களையும் எங்கள் அதிகாரிகள் பயன்படுத்தினார்கள் என்று ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் தெரிவித்துள்ளார்.
மேலும், தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் வானிலை சீரடைந்துள்ளது என்றும் விமானத்தை தேடும் பணி மீண்டும் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேவேளையில், விமானத்தை தேடும் பணியில் 12 விமானங்கள் ஈடுபட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கடல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. முன்னதாக, மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரிலிருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8 ஆம் தேதி அதிகாலை நடுவானில் மாயமானது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.
சீனக்கடலுக்கு மேலே சுமார் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, வியட்நாம் அருகே தோ சூ தீவுக்கு 250 கி.மீ. தொலைவில் கடலில் விழுந்து நொறுங்கியதாக முதல் கட்ட தகவல் வெளியானது முதல், இதுவரை பல்வேறு முரண்பட்ட தகவல்களே வந்து கொண்டிருக்கின்றன
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரிலிருந்து தென்மேற்கில் 2500 கி.மீ தொலைவில் 2 பாகங்கள் இந்திய பெருங்கடல் இருப்பதாக ஆஸ்திரேலியா செயற்கைக்கோளில் அடையாளம் காணப்பட்டன. மேலும் சினாவின் செயற்கை கோளிலும் இது போன்ற பாகங்கள் தென்பட்டன. இதைத் தெடர்ந்து இந்திய பெருங்கடலிலும் அதன் தென் பகுதியிலும் தேடுதல் வேட்டையில் 29 விமானங்கள், 21 கப்பல்கள்,6 ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டன.
இதனிடையே மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்திருக்கும் என்று மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்தர்.மேலும் விமானத்தில் பயணம் செய்த யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்றும் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கடலில் விமானம் விழுந்திருக்கலாம் என்று நிபுணர்கள் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து விமானத்தை தேடும் பணியை நிறுத்தப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஆஸ்திரலிய பிரதமர் டோனி அபோட் கூறுகையில் நாங்கள் அந்த குடும்பங்களுக்கு கடமை பட்டிருக்கிறோம். கவலைக்குள்ளான உலக மக்களுக்கு பதில் சொல்ல நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இறுதியாக நாங்கள் சிதைவு பொருட்களை கண்டறிந்தோம். மாயமான விமானத்தின் புதிரை ஒருவழியாக முடிவுக்கு கொண்டு வருவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும், மாயமான விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் குடும்பத்தினருக்கு நாங்கள் முடிந்த வரை தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் நிலவும் நிச்சயமற்ற நிலை, வேதனை அளிப்பதாக உள்ளது. இந்த மக்கள் தற்போது பேசமுடியாத நிலையில் உள்ளனர். அவர்கள் ஆஸ்திரேலிய வர விரும்பினால், அவர்களை நாங்கள் வரவேற்கிறோம். அவர்களுக்கு நாங்கள் எல்லைவகையிலும் முடிந்தவரை உதவி செய்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, சீனா இந்த சிறப்பு தூதரை மலேசியவுக்கு அனுப்பியுள்ளதாக சில செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.