டெல்லி டெஸ்ட்: ஒரே நாளில் 17 விக்கெட்டுகள் வீழ்ந்தது

திங்கள், 7 நவம்பர் 2011 (18:00 IST)
வேகப் பந்து வீச்சும், சுழற்பந்து வீச்சும் சம அளவில் ஆதிக்கம் செலுத்திய இரண்டாவது நாளான இன்று, இந்திய அணியை 209 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து 95 ரன்கள் முன்னிலை பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, தனது இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 21 ரன்களை எடுத்துள்ளது.

டெல்லியில் உள்ள பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் இந்திய - மேற்கிந்திய அணிகளுக்கு இடையே நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான இன்று, 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்திருந்த மேற்கிந்திய தீவுகள் அணி, ஓஜா, அஸ்வின் பந்துவீச்சில் 304 ரன்களுக்கு சுருண்டது.

111 ரன்களுடன் ஆடிக்கொண்டிருந்த சிவ்நாராயண் சந்தர்பால், இஷாந்த் சர்மா பந்துவீச்சில் எல்.பி.டபுள்யூ. ஆகி 118 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பா 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த ஆட வந்த எவரும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையை எட்டவில்லை. இந்திய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யன் ஓஜா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தமிழக வீரர் அஸ்வின் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தனது முதல் இன்னிங்ஸை இந்திய அணி மிகச் சிறப்பாகத் தொடங்கியது. கம்பீரும், சேவாக்கும் சிறப்பாக ஆடி ரன்களைக் குவித்தனர். சேவாக் நேராக அடித்த ஒரு பந்தை பந்து வீச்சாளர் சாம்மி தடுக்க முற்பட, அது அவரது கையில் பட்டு எதிர் விக்கெட்டைத் தாக்கியது. அப்போது கிரீஸூக்கு வெளியே இருந்த கம்பீர் ஆட்டமிழந்தார். 41 பந்துகளில் 7 பெளண்டரிகளுடன் 41 ரன்களை எடுத்திருந்தார்.

சேவாக் 46 பந்துகளில் 9 பெளண்டரிகளுடன் 55 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பிஷ்ஷூவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஆடவந்த சச்சின் 7 ரனகளுக்கும், லக்ஷ்மண் 1 ரன்னுக்கும் ஆட்டமிழக்க இந்திய அணியின் சரிவு தொடங்கியது.

தோனி, அஸ்வின், யாதவ் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். யுவராஜ் அதிரடியாக ஆடி 23 ரன்களும், இஷாந்த் சர்மா 17 ரன்களும் எடுத்ததால் இந்திய அணி 200 ரன்களைக் கடந்த ஆட்டமிழந்தது.

முதல் இன்னிங்ஸில் 95 ரன்கள் வித்தியாசம் பெற்று, இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய மே.இ.அணியை கட்டுப்படுத்த புதிய பந்தை சுழற்பந்து வீச்சாளர்களிடம் கொடுத்தார் தோனி, அது பயனளித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் பிராட்வைட்டும், போவலும் ஆட்டமிழந்தனர். ஆட்ட நேர முடிவில் மே.இ.அணி 2 விக்கெட்டுகளை இழந்து 21 ரன்கள் எடுத்துள்ளது. ஒட்டுமொத்தமாக 115 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்