சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் பி பிரிவு லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தி முதலாவது வெற்றியை ருசித்தது.
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நேற்றிரவு நடந்த போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. பெங்களூர் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்லும், தில்ஷானும் களம் இறங்கினர்.
பிரெட்லீயின் முதல் ஓவரை மெய்டனாக்கிய கெய்ல், அவரது அடுத்த ஓவரில் 2 சிக்சர் விரட்டி அதற்கு பரிகாரம் தேடிக் கொண்டார். இதன் பிறகு காலிசின் பந்து வீச்சில் மீண்டும் ஒரு சிக்சர் அடித்த கெய்ல், அதே ஓவரில் கிளீன் போல்டானார். யார்க்கராக வீசப்பட்ட பந்து, லெக் ஸ்டம்பை தூக்கியது. கெய்ல் 25 ரன்களுடன் வெளியேறினார்.
இதன் பின்னர் வந்த விராட் கோக்லி (0), சவுரப் திவாரி (19), தில்ஷான் (18), அகர்வால் (13), முகமது கைப் (5) ஆகியோர் சொற்ப ரன்னில் வெளியேறினர். 13.1 ஓவர்களில் 91 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை பெங்களூர் பறிகொடுத்தது.
7வது விக்கெட்டுக்கு இணைந்த அணித் தலைவர் டேனியல் வெட்டோரியும், ராஜு பாத்கலும் அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். இவர்களின் எதிர்பாராத ஆட்டத்தால் கொல்கத்தா பவுலர்கள் திணறி போனார்கள்.
ராஜீ பாத்கல் 25 ரன்களிலும், வெட்டோரி 44 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூர் அணி 9 விக்கெட்டுக்கு 169 ரன்கள் சேர்த்தது. கடைசி 5 ஓவர்களில் மட்டும் பெங்களூர் அணி 67 ரன்கள் குவித்தது. கொல்கத்தா தரப்பில் பிரெட்லீ, இக்பால் அப்துல்லா, உனட்கட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 17.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 171 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பிராட் ஹேடின் 42 ரன்களில் ஆட்டம் இழந்தார். காலிஸ் 64 ரன்களுடனும், கவுதம் கம்பீர் 55 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 3வது லீக்கில் ஆடிய கொல்கத்தா அணிக்கு இது முதலாவது வெற்றியாகும். ஆனால் கொல்கத்தா அணி எஞ்சிய ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும், ரன் ரேட் மற்றும் மற்ற சில அணிகளின் ஆட்டங்களின் முடிவை பொறுத்தே அரைஇறுதி வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரிய வரும்.
பெங்களூர் ராயல் சேலஞ்சர் அணி தொடர்ந்து சந்தித்த 2-வது தோல்வியாகும். இந்த அணிக்கும் அரைஇறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது. பெங்களூர் அணிக்கு இன்னும் இரு லீக் ஆட்டங்கள் உள்ளன.