பந்து வீச்சு சிறப்புறும் - கேரி கர்ஸ்டன் உறுதி

வெள்ளி, 24 டிசம்பர் 2010 (15:43 IST)
நாளை மறுநாள் டர்பனில் துவங்கவுள்ள இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய பந்து வீச்சு ஜாகீர் கானின் வருகையால் சிறப்பாக செயல்படும் என்று இந்திய பயிற்சியாளர் கேரி கர்ஸ்டன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்திய பந்து வீச்சில் ஒன்றுமேயில்லை. பலவீனமான பந்து வீச்சு, வேகம் இல்லை என்றெல்லாம் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர்கள் இந்திய பந்து வீச்சை குறைகூறினாலும் கேரி கர்ஸ்டன், '20 விக்கெட்டுகளை இதற்கு முன்பு எல்லா சூழ்நிலைகளிலும் வீழ்த்த்தியுள்ளோம் இங்கு மட்டும் ஏன் முடியாது?" என்று உறுதியாக உள்ளார்.

பந்து வீச்சிலும் தரம் உள்ளது என்கிறார் கர்ஸ்டன். அவுட் ஃபீல்ட் எப்படி உள்ளதோ அதே கலரில் பிட்ச் உள்ளது, இருப்பினும் இந்த இரண்டு நாட்களில் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்போம் என்று கூறியுள்ளார் கர்ஸ்டன்.

கடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா ஒரு 100 ரன்கள் பின் தங்கியிருந்தது அவ்வளவே. டிராவுக்கும் தோல்விக்கும் உள்ள தூரம் 100 ரன்கள்தான்.

முதல் டெஸ்ட் போட்டியாகட்டும், இந்த டெஸ்ட் போட்டியாகட்டும் தயாரிப்பில் எந்தவிதக் குறையும் இல்லை. செஞ்சூரியனில் முதல் நாள் பேட்டிங் சற்று கடினமானதுதான். ஆனால் வீரர்கள் சற்றே நிதானமாக விளையாடியிருக்கவேண்டும். அல்லது தங்களது முழுமையான ஆஅட்டத்தை வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.

வீரர்கள் மிகவும் உறுதியுடன் உள்ளனர். சிறப்பாக விளையாடி டெஸ்ட் போட்டியை வெல்வதில் அனைத்து வீரர்களும் பெரிய ஆர்வத்துடன் கடின உழைப்பு செய்து வருகிறார்கள் இந்த விதத்தில் எனக்கு முழு திருப்தி இருக்கிறது.

நமது முதல் 6 வீரர்களில் ஒருவர் நல்ல, பெரிய ரன் எண்ணிக்கையை எட்டினால் 400 ரன்களுக்கு மேல் எடுப்பது ஒன்றும் பெரிய காரியமல்ல. டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இன்னிங்ஸில் 400 ரன்கள் எடுக்காத அணிகளுக்கு நெருக்கடி ஏற்படும் என்பது அனைவரும் அறிந்ததே.

ரைனாவுக்கு பதில் புஜாரா அணியில் சேர்க்கப்படுவாரா என்பது பற்றி கர்ஸ்டன் எதுவும் முடிவெடுக்கவில்லை என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்