ஹர்பஜனுக்கு 5 ஒரு நாள் போட்டிகள் தடை!

புதன், 14 மே 2008 (16:29 IST)
ஐ.பி.எல். போட்டி ஒன்றில் எதிரணியைச் சேர்ந்த ஸ்ரீசாந்தை அறைந்த விவகாரத்தில் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கிற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒழுங்குக் குழு 5 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாட‌த் தடை விதித்துள்ளது.

ஏற்கனவே ஐ.பி.எல். குழுவால் 11 ஐ.பி.எல். போட்டிகளுக்கு ஹர்பஜன் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஹர்பஜன் அந்த ஐ.பி.எல். போட்டியின் போது நடந்து கொண்ட விதத்தை மேலும் துருவி விசாரிக்க வழக்கறிஞர் நானாவதி ஆணையத்தை பி.சி.சி.ஐ நியமித்தது.

விசாரணைகளை முடித்த வழக்கறிஞர் நானாவதி தனது 14 பக்க அறிக்கையை நேற்று கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஷரத்பவார் பார்வைக்கு அனுப்பி வைத்தார்.

ஷரத் பவார் அதனை வாரியத்தின் ஒழுங்குக் குழுவின் மேல் நடவடிக்கைக்கு அனுப்பி வைத்தார். இதனையடுத்து ஒழுங்குக் குழு இன்று ஹர்பஜனுக்கு இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

இன்னொரு முறை ஹர்பஜன் சிங் இது போன்று நடந்து கொண்டால் வாழ் நாள் தடையை எதிர்கொள்ள வேண்டிவரும் என்று ஷரத் பவார் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்