ஐ.பி.எல்.: கங்குலியின் நைட் ரைடர்ஸ் அணி வெற்றி!
ஞாயிறு, 20 ஏப்ரல் 2008 (20:07 IST)
கொல்கத்தாவில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் செளரவ் கங்குலி தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் சற்றுமுன்பு நடந்துமுடிந்த ஐ.பி.எல். இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் பூவாதலையாவில் வென்ற லட்சுமணன் தலைமையிலான ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணி 18.4 ஓவரில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 110 ரன்களை எடுத்தது.
இந்த அணியில் அதிகபட்சமாக சைமண்ட்ஸ் 32 ரன்களையும், கில்கிரிஸ்ட் 23 ரன்களையும் குவித்தனர். அதற்கு அடுத்தபடியாக பங்கர், வேணுகோபால் ராவ் ஆகியோர் தலா 14 ரன்களையும், ஸ்டைரிஸ் 6 ரன்களையும் எடுத்தனர்.
அணித் தலைவர் லட்சுமணன், சர்மா, சமிந்தா வாஸ், ஓஜா ஆகியோர் ரன்கள் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. கார்த்திக் 3 விக்கெட்டுகளையும், அகர்கர் 2 விக்கெட்டுகளையும், திண்டா, சர்மா, முகமது ஹபீஸ், ஹஸ்ஸி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதிகபட்சமாக ஹஸ்ஸி 35 ரன்களைக் கொடுத்தார்.
111 ரன்கள் இலக்கு!
இதையடுத்து 111 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கங்குலி தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆட்டத்தைத் துவங்கியது.
இந்த அணியில் பிரசாந்த் சகா 10 ரன்களை எடுத்திருந்த நிலையில் வாசின் பந்துவீச்சில் ஸ்டைரிசிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதேபோல மெகல்லம் 5 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் சிங்கின் பந்துவீச்சில் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
பாண்டிங் ரன் எதுவும் எடுக்காத நிலையில் வாசின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனார். அணித் தலைவர் கங்குலி 14 ரன்களைக் குவித்து அடுத்த ரன்னிற்கு ஓஜாவின் பந்தைத் தட்ட முயற்சிக்கையில் போல்ட் ஆனார்.
முகமது ஹபீஸ் 13 ரன்களைக் குவித்த நிலையில் ஓஜாவின் பந்து வீச்சில் சைமண்ட்சிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 104 ரன்களைக் குவித்திருந்தது.
அணியின் மொத்த ரன்கள் 106 என்றிருந்த போது, 32 ரன்களுடன் களத்தில் இருந்த ஹஸ்ஸி சிக்ஸர் அடித்து வெற்றியைக் கைப்பற்றினார். அப்போது அவருடன் இணை சேர்ந்து ஆடிக்கொண்டிருந்த சுக்லா 4 ரன்களை எடுத்திருந்தார்.
டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் வாசு 9 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், ஓஜா 18 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.