ஐபிஎல்: சென்னை கிங்ஸ் வெற்றி!

சனி, 19 ஏப்ரல் 2008 (20:38 IST)
ஆஸ்ட்ரேலிய வீரர் மைக்கேல் ஹஸ்ஸி அதிரடியாக ஆடி எடுத்த அபார சதத்தால் 20 ஓவர்களில் 240 ரன்கள் எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 33 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வென்றது.

மொஹாலியில் சற்று முன் நடந்து முடிந்த ஐபிஎல் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் பூவா தலையா வென்ற சென்னை அணி முதலில் களமிறங்கியது.

ஆஸி. வீரர் மேத்யூ ஹைடன் 17 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை தந்த நிலையில் களமிறங்கிய மைக்கேல் ஹஸ்ஸி, தான் சந்தித்த ஒவ்வொரு பந்தையும் தாறுமாறாக விளாசினார். 54 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 8 பெளண்டரிகளுடனும், 9 சிக்ஸர்களுடனும் 114 ரன்களைக் குவித்தார்.

இந்திய இளம் விரர் சுரேஷ் ரெய்னா 13 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 3 சிக்ஸர்களுடனும், 2 பெளண்டரிகளுடனும் 32 ரன்கள் எடுத்தார். ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் தமிழக விரர் பத்ரிநாத் 13 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணி 240 ரன்களைக் குவித்தது.

241 ரன்கள் எனும் எட்டமுடியாத வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ஜேம்ஸ் ஹோப்ஸ் அருமையாக ஆடி அடித்தளம் அமைத்தார். 33 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட ஹோப்ஸ் 3 சிக்ஸர்களுடனும், 10 பெளண்டரிகளுடனும் 71 ரன்கள் குவித்தார்.

இலங்கை விரர் குமார் சங்ககாராவும் சிறப்பாக ஆடி 33 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். யுவராஜ் சிங் 23 ரன்களும், சைமன் காட்டிச் 21 ரன்களும் எடுத்தனர். ஆயினும் இலக்கை எட்ட முடியவில்லை. 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

பெங்களுரு போட்டியில் பிரண்டன் மெக்கல்லம் சாதித்த்தை இன்று சென்னை அணிக்காக ஹஸ்ஸி சாதித்துக் காட்டினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்