இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸி அணி டி 20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த டி 20 தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸி அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் மார்ச் 2 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதையடுத்து இரண்டாவது போட்டி இன்று நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் சற்று முன்னர் தொடங்கியது. இதில் டாஸில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங்க் இறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே சீராக விக்கெட்களை இழந்து வந்தது. இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி மட்டுமே நிலைத்து நின்று விளையாடினார். விஜய் சங்கர், ரவிந்தர ஜடேஜா ஆகியோர் அவருக்கு துணையாக சிறிது நேரம் நின்று விளையாடினார்.