சினி பாப்கார்ன் - முதல்வர், வடிவேலு, ஆஸ்கர் பரிந்துரை மற்றும் பப்பரப்பாம்

சனி, 13 ஆகஸ்ட் 2016 (09:55 IST)
முதல்வர் 
 
மாநில அரசுகள் தங்கள் மாநில திரைப்பட கலைஞர்களுக்கு வருடந்தோறும் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகின்றன. கேரளாவில் மிகக்கறாராக இந்த விருதுகள் வருடந்தோறும் வழங்கப்படுகிறது. 
 
தகுதியில்லாதவர்களுக்கு விருது வழங்குவதற்கான எந்த சாத்தியமும் இல்லாதவகையில் நேர்மையுடன் கேரள அரசின் மாநில விருதுகள் விருதுக்குழு கமிட்டியால் தேர்வு செய்யப்படுகின்றன. ஆந்திராவில் நந்தி விருதுகள். 
 
தமிழக அரசு சார்பிலும் விருதுகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் பல வருடங்களாக இந்த விருதுகள் வழங்கப்படவில்லை. இதற்கு முன்பும் இப்படி சில வருடங்கள் முடங்கிப் போய். மூன்று வருடங்களுக்கான விருதுகளை ஒரே நேரத்தில் தந்திருக்கிறார்கள். இந்தமுறை விருது வழங்கி எட்டு ஆண்டுகளுக்கு மேலாகிறது. 
 
எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அதற்கேற்ப அவர்களுக்கு ப்ரியமானவர்களுக்கே தமிழக அரசின் விருதுகள் வழங்கப்பட்டு வந்தன. இப்போதும் அதுவும் இல்லை. 
 
இந்நிலையில் சட்டசபை கேள்வி நேரத்தில், திரைப்பட விருதுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முதல்வர், விரைவில் தமிழக அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெறும். அதுவும் பிரமாண்டமாக என்று தெரிவித்தார். 
 
வழக்கம் போல் விருதுக்கான கலைஞர்களை, படங்களை தேர்வு செய்யும் பொறுப்பை கட்சி சார்புடையவர்களுக்கு தராமல், கேரளா போன்று நேர்மையாக விருது தேர்வுக்குழு அமைத்து தேர்வு செய்ய வேண்டும் என்பதே அனைவரது விருப்பமும் எதிர்பார்ப்பும்.


 
 
வடிவேலு 
 
இனிமே ஹீரோதான் என்ற வடிவேலு யதார்த்தம் புரிந்து இறங்கி வந்து கத்திச்சண்டை படத்தில் காமெடியனாக நடிக்கிறார். கத்திச்சண்டையின் விசேஷமே வடிவேலுதான் என்பதால் அவருக்கு படத்தில் என்ன வேடம் என்பதை அறிய அனைவருக்குமே ஆவல். 
 
இதில் மனோதத்துவ டாக்டர் பூத்ரியாக வித்தியாசமான வேடத்தில் வடிவேலு நடித்து வருகிறார். நீளமாக முடிவளர்த்து பெண்களைப் போல் இரட்டைஜடை பின்னி, பழைய வடிவேலை பார்த்ததும் சிhpப்பு வருமே... 
 
அப்படி மாறிப் போயிருக்கிறார். 
 
கத்திச்சண்டையை கதை காப்பாற்றுமோ இல்லையோ வடிவேலின் காமெடி காப்பாற்றும். 
 
ஆஸ்கர் பரிந்துரை 
 
அடுத்த வருடம் பிப்ரவரி மாதம்தான் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படும். ஆனால் இப்போதே இந்தியா சார்பில், சிறந்த வெளிநாட்டு திரைப்படம் பிரிவில் எந்தப் படத்தை அனுப்புவது என்று பரிந்துரைக்க ஆரம்பித்துள்ளனர். 
 
இந்த வருடம் குணசேகர் இயக்கத்தில் அனுஷ்கா நடித்த ருத்ரம்மாதேவியை பரிந்துரைப்பது என்று இந்திய ஃபிலிம் பெடரேஷன் முடிவு செய்திருப்பதாக குணசேகர் கூறியுள்ளார். சரித்திரப் படமான இதனை குணசேகர் பெரும் பொருட் செலவில் தயாரித்து இயக்கினார். கடுமையான உழைப்பில் படம் தயாரானது. 
 
ஆனாலும், படத்தின் தரமும், பயன்படுத்திய கிராபிக்ஸும் முழுமையானது என்று சொல்ல முடியாது. ஆஸ்கர் போட்டியில் கலந்து கொள்ளும் அளவுக்கு ருத்ரம்மாதேவி தகுதியானதில்லை. 
 
இதில் முக்கியமான இன்னொரு விஷயமும் இருக்கிறது. ஆஸ்கருக்கு இந்தியாவிலிருந்து ஒரேயொரு படம்தான் பரிந்துரை செய்யப்படும். அதற்கு முன், இந்த பரிந்துரைக்கு பல படங்கள் போட்டியிடும். அதில் ஒன்றுதான் ருத்ரம்மாதேவியே தவிர, ருத்ரம்மாதேவி ஆஸ்கருக்கு அனுப்ப தேர்வு செய்யப்படவில்லை என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். 
 
பப்பராப்பாம் 
 
படத்தின் தலைப்பு, ஆரம்பக் காட்சி எல்லாம் மங்களகரமாக இருக்க வேண்டும் என்று பார்த்துப் பார்த்து செய்ததெல்லாம் அந்தக் காலம். அபசகுனம் என்று எதை எதை சொல்வார்களோ அதையெல்லாம் முன்னிறுத்தி படம் எடுக்கும் அளவுக்கு சென்டிமெண்டை சிதறடித்துவிட்டனர் இளைய தலைமுறையினர். 
 
சசிகுமாரன் எழுதி இயக்கியிருக்கும் படம் பப்பராப்பாம். இந்தப் படத்தின் டைட்டிலை தலையில் கட்டுடன் ஒரு பிணம் படுத்திருப்பது போலவே வடிவமைத்திருக்கிறார்கள். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம்பெற்றிருக்கும் வாசகம், 
 
வைடா கட் அவுட்டு 
அண்ணன் வந்துட்டாரு 
பாடையை விட்டு... 
 
பக்கத்தில் போனால் பிண வாடை அடிக்குமளவுக்கு போஸ்டர் நிறைய பாடை பிணம் என்று ஒரே சுடுகாட்டு எபெக்ட். 
 
சசிகுமாரன் போன்று மங்களகரமான சென்டிமெண்டை அடித்துத் தூளாக்குங்கள் இளைய தலைமுறை படைப்பாளிகளே.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்