தைப்பூச நாளில் ஜோதி தரிசனம் எதனை உணர்த்துகிறது தெரியுமா...?

ஆண்டுதோறும் தைப்பூச நன்னாளில் வடலூரில் ஏழு திரைகள் விலகி ஜோதி தரிசனம் நிகழும். ஒவ்வொரு திரைக்கும் ஒவ்வொரு சக்தி என்பது நம்பிக்கை. 

கண்ணாடிக் கதவுகளில் கறுப்புத்திரை என்பது மாயா சக்தி, நீலத்திரை - கிரியாசக்தி, பச்சைத் திரை - பராசக்தி, சிவப்புத் திரை - இச்சா சக்தி, பொன்வண்ணத் திரை  - ஞானசக்தி, வெண்மைத் திரை - ஆதிசக்தி, கலப்புத்திரை - சிற்சக்தி.
 
கருமை, நீலம், பசுமை, சிவப்பு, பொன்மை, வெண்மை, கலப்பு என ஒன்றிற்கொன்று நிற அடர்த்தி குறைந்து வரும் ஏழு திரைகள் விலக, தூய கன்ணாடியின் வழியே பேரொளிப் பிழம்பை ஞான சபையில் வள்ளலார் அமைத்தது எதற்கெனில், மாயா சக்தி என்னும் திரைகள் விலகி மனம் தூய்மை பெற்றதும், உள்ளொளியாய் இறைவன் விளக்கம் தருகிறான் என்பதைப் புறத்தில் காட்டுவதற்கேயாம்.
 
அருள் ஒளிவிளங்கிட ஆணவம் எனும்ஓர் இருளற என்உளத்து ஏற்றிய விளக்கே என்று அருட்பெருஞ் ஜோதி அகவலில் வள்ளலார் கூறியுள்ளார். அருட்பெருஞ்சோதியாகிய இறைவனை ஜோதி வடிவில் அன்று தரிசிக்கிறோம் என்பது கருத்து.
 
தைப்பூச நாளில் விடியற்காலையில் மேற்கே சந்திரனும் கிழக்கே சூரியனும் காணப்பெறும். அந்த நேரத்தில்தான் ஞான சபையில் அருட்பெருஞ்ஜோதியைக் காட்டியருளினார் வள்ளலார். இதனை உணர்த்தும் விதமாக ஆண்டுதோறும் தைப்பூச நாளில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்