தஞ்சாவூர் மாவட்டம் வளவன்புரத்தை சேர்ந்தவர் பிரவீன். இவர் சில மாதங்களுக்கு முன்பு வாகன லோன் எடுத்து கார் மற்றும் பைக் வாங்கியுள்ளார். கொரோனா காரணமாக தவணை கட்ட முடியாத சூழலில் இருந்த நிலையில், தவணை கட்டாததற்காக கடன் கொடுத்த தனியார் நிதி நிறுவனம் நீதிமன்ற உத்தரவை பெற்று பிரவீனை கைது செய்ய காவல் நிலையத்தை அணுகியதாக தெரிகிறது.
அதனை தொடர்ந்து காவல் ஆய்வாளர் பெரியசாமி கடன் வாங்கிய பிரவீனை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்துள்ளார். மேலும் கார் லோன் பிரவீனின் தாயார் பெயரில் இருந்ததால் அவரையும் கைது செய்வதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பிரவீன் காவல் நிலையத்திலேயே பெட்ரோலை மேலே ஊற்றிக் கொண்டு பேஸ்புக்கில் லைவ் போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரை தடுத்து நிறுத்திய போலீஸார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.