கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜய தாரணி திடீரென அந்த கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாராளுமன்ற தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில் பாஜகவில் முக்கிய பதவிகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் கட்சியில் சேர்ந்து ஆறு மாதம் ஆகியும் இன்னும் அவருக்கு எந்தவிதமான பதவியும் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் விஜய தாரணி பேசியபோது மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நான் இருப்பதையும் விட்டுவிட்டு பாஜகவுக்கு வந்திருக்கிறேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வரவில்லை, எதிர்பார்ப்போடு தான் வந்திருக்கிறேன்.
நன்றாக உழைக்க வேண்டும், கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது, ஆனால் அதற்கு பதவி தேவை, நான் கட்சிக்கு வந்து ஆறு மாதம் ஆகிவிட்டது, ஆனாலும் இன்னும் எனக்கு எந்த பதவியும் கொடுக்கவில்லை. எனக்கு நல்லது செய்வார்கள். என்னை போன்றவர்கள் பணியை பாஜக நிச்சயம் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து அவருக்கு பதவி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.