தற்போது சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. ஆரம்பத்தில் அதிக மக்கள் பயணிக்கவில்லை என்றாலும் தற்போது பயண நேரம் மிச்சமாவதை கண்டு ஏராளமானோர் மெட்ரோ சேவையை நாடத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான கோவை, திருச்சி மற்றும் மதுரையிலும் மெட்ரோ சேவைகள் தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.
அதன்படி திருச்சியில் 3 வழித்தடங்களில் 68 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சமயபுரத்திலிருந்து சத்திரம், தில்லை நகர் வழியாக வயலூர் வரை ஒரு வழித்தடமும், துவாக்குடியிலிருந்து பால்பண்ணை, மத்திய பேருந்து நிலையம் வழியாக பஞ்சப்பூர் வரை மற்றொரு வழித்தடமும், திருச்சி ஜங்சனிலிருந்து ஏர்போர்ட், புதுக்கோட்டை சாலை வழியாக மாத்தூர் ரிங்ரோடு வரை ஒரு வழித்தடமும் என 3 வழித்தடங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.