தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் மாதாமாதம் கொஞ்சம் கொஞ்சமாக விதிமுறைகளை அரசு தளர்த்தி வருகிறது. இந்நிலையில் இம்மாத தொடக்கத்தில் அரசியல், கலாச்சார நிகழ்வுகளை பாதுகாப்பு ஏற்பாட்டுடன் நடத்த அரசு அனுமதி அளித்தது. பின்னர் கொரோனா தாக்கம் அதிகரிக்க கூடுமென்பதால் திரும்ப பெறப்பட்டது.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கலாச்சார நிகழ்ச்சிகளை 50% நபர்களுடன் அல்லது அதிகபட்சமாக 200 பேர் வரை கலந்து கொள்ளுமாறு நடத்தலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது. நிகழ்ச்சிகளில் பங்கேற்போர் மாஸ்க் அணிவதும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் அவசியம் என கூறப்பட்டுள்ளது.
அதேசமயம் அரசியல் ரீதியான பிரச்சார கூட்டங்களுக்கு தடை தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது. பாஜகவின் வேல் யாத்திரை, திமுகவின் தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்டவற்றை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.