2015ம் ஆண்டு மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை இதுபற்றி உறுதியான எந்த தகவலையும் மத்திய அரசு கூறவில்லை. கடந்த ஜூன் 2ம் தேதி மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அமைச்சர் உதயகுமார் கூறினார். அதேபோல், மதுரையில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூவின் இதை உறுதி செய்தார்.
தற்போது புதிய தகவலாக தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக 1200 கோடியில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு ஒப்புதலுக்காக மத்திய நிதி அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியாகி உள்ளது. நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன் இம்மாத இறுதிக்குள் மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்துடன் அறிவிக்கப்பட்ட மற்ற இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமாணப் பணிகள் தொடங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் ஏற்பட்ட காலதாமதத்திற்கு எங்கு மருத்துவமனை அமைப்பது என்பதில் ஏற்பட்ட குழப்பமே காரணம் என்றும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து ‘முதலில் தஞ்சாவூர் என முடிவு செய்யப்பட்டு பின்பு மதுரைக்கு மாற்றியதால்தான் காலதாமதமானது. தற்போது மதுரையில் மத்திய அரசு மண் பரிசோதனை செய்துள்ளது’ என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.