பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவராக ஆம்ஸ்ட்ராங் இருந்து வந்தார். இவர் சென்னை பெரம்பூரில் வசித்து வந்த நிலையில், வழக்கம்போல் வீட்டில் இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், ஆம்ஸ்ட்ராங் மீது சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்த நிலையில் அக்கம் பக்கத்தினர், உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த பெரம்பூர் மற்றும் செம்பியம் போலீசார், ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி ஆம்ஸ்ட்ராங் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் அசம்பாவிதச் சம்பவங்களைத் தவிர்க்க பெரம்பூர், செம்பியம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.