ஜெயலலிதா மரணம் தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் பரபரப்பானத் தகவல்களை வெளியிட்டார் அமைச்சர் சி.வி. சண்முகம். இதயக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவுக்கு ஏன் ஆஞ்சியோ செய்யவில்லை எனக் கேள்வியெழுப்பினார். இது தொடர்பாக போலிஸ் விசாரணை வேண்டுமெனவும் சம்மந்தப்பட்டவர்களை விசாரிக்க வேண்டும் எனவும் கோரினார். இதற்கு அதிமுக வின் மற்றொரு அமைச்சரான ஜெயக்குமாரும் ஆதரவு தெரிவித்தார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுக சாமி ஆணையம் ஒரு ஆண்டுக்கும் மேலாக விசாரித்து வரும் நிலையில் அமைச்சர்களின் இந்த பேச்சு சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. இந்த குற்ற்ச்சாட்டுகளுக்கு திருவாரூர் இடைத்தேர்தல்தான் காரணம் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் எழுந்தன. இடைத்தேர்தலில் தோற்றாலும் பராவியில்லை டிடிவி யின் அமமுக வோடு அதிக வாக்குகள் பெற வேண்டும் என்பதற்காகவே, ஜெ. மரனம் தொடர்பாக சசிகலா மற்றும் தினகரன் மீது முழுப் பழியையும் சுமத்தும் வேலையை அதிமுக செய்துவருவதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் குற்றச்சாட்டுகளுக்கு சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூரப்பாண்டியன் பதில் அளித்துள்ளார். நேற்று ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் ‘ஆணையத்தின் விசாரணை முடியும் தருவாயில் போலீஸ் விசாரணை வேண்டுமென சட்ட அமைச்சரே கோருவது, ஆணையத்துக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. ஜெயலலிதாவுக்கு அஞ்சியோ ஏன் செய்யவில்லை எனக் கேட்கிறார்கள். 2016 ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயலலிதாவைப் பர்வையிட்ட எய்ம்ஸ் மருத்துவர்கள், ஜெயலலிதாவுக்கு எந்த இதயச் சிகிச்சைகளும் செய்யத் தேவையில்லை எனவும் ஜெயலலிதாவுக்கு இதய நோயே இல்லை எனவும் சாட்சியம் அளித்துள்ளனர்’ எனக் கூறினார்.