சசிகலா குடும்பத்தில் அடுத்து சிறைக்கு செல்லும் நபர் பாஸ்கரன்?

வியாழன், 4 மே 2017 (14:16 IST)
சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் சிறையில் வாடிவரும் வேளையில், அவர்கள் குடும்பத்திலிருந்து அடுத்ததாக பாஸ்கரன் சிறைக்கு செல்வார் எனத் தெரிகிறது.


 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அடுத்து, சுதாகரனின் சகோதரரான டிடிவி தினகரன், இரட்டி இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக டெல்லி போலீசார் தொடர்ந்து வழக்கில், தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 
இந்நிலையில், சசிகலாவின் மற்றொரு உறவினரான பாஸ்கரும் சிறைக்கு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டிருப்பது மன்னார்குடி குடும்பத்திற்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம். 
 
ஜெ.ஜெ.தொலைக்காட்சி நிர்வாகத்தில் இருந்தபோது, சினிமா மோகத்தில் தூண்டப்பட்டு தலைவன், பாஸ் என இரண்டு படங்களில் பாஸ்கரன் நடித்தார். ஆனால், அந்த இரண்டு படங்களும் வெளியாகவில்லை. மேலும், தன்னை சூப்பர்ஸ்டார் ரேஞ்சுக்கு பில்டப் செய்து, மேடைகளில் பேசும் போது, எனது ரத்தத்தின் ரத்தங்களே.. என கூறியதுதான் ஜெயலலிதாவிற்கு கோபப்படுத்தியது.


 

 
எனவே, கஞ்சா வழக்கில் அவரை சிறைக்கு அனுப்பினார் ஜெயலலிதா. அதன் பின் பாஸ்கரன் அடக்கி வாசிக்க ஆரம்பித்தார். 1995ம் ஆண்டில், ஜெயா தொலைக்காட்சிக்கு பொருட்கள் வாங்கியது தொடர்பாக, ரிம்சாட் என்ற செயற்கைக் கோள் நிறுவனத்திற்கு 6.8 லட்சம் டாலர் பண பரிமாற்றம் செய்ததாக அந்நிய செலவாணி வழக்கில் இவரை அமலாக்கப்பிரிவினர் கைது செய்தது. அந்த வழக்குன் தீர்ப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இதில் அவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் சிறைக்கு செல்வார் எனத் தெரிகிறது.
 
இப்படி தொடர்ச்சியாக மன்னார்குடி குடும்பத்தில் சிறைக்கு செல்வது, சசிகலாவிற்கும், மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாம். 

வெப்துனியாவைப் படிக்கவும்