பிரிந்து சென்ற கவுதமி ; வாய் திறக்காத கமல்ஹாசன் : பின்னணி என்ன?

வியாழன், 3 நவம்பர் 2016 (15:06 IST)
நடிகர் கமல்ஹாசன் உடனான 13 வருட கால உறவு முறிந்துவிட்டதாக நடிகை கவுதமி சமீபத்தில் அறிவித்துள்ளார்.


 

 
கமல்ஹாசன் தனது மனைவி சரிகாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். அதன்பின் நடிகை கவுதமியுடன் நெருக்கமானார்.  ஆபூர்வ சகோதரர்கள் தொடங்கி, தேவர் மகன், குருதிப்புனல், பாபநாசம் வரையான படங்களில் கமலுடன் நெருக்கமாகவே நடித்திருந்தார் கவுதமி. அதன்பின், கமலின் பெரும்பாலான திரைப்படங்களுக்கு ஆடை அலங்காரம் செய்து வந்தார் கவுதமி. 
 
இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே 13 வருடங்கள் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். கவுதமிக்கு சுப்புலட்சுமி என்ற மகள் இருக்கிறார். தனது 2 மகள்களோடு, சுப்புவையும் தனது மகளாகவே பாவித்தார் கமல்.
 
கவுதமிக்கும், கமலின் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசனுக்கும் இடையே மனஸ்தாபங்கள் இருப்பதாக பலமுறை செய்திகள் வெளியானது. ஆனால் இருவரும் அதை மறுத்தே வந்தனர்.


 

 
தற்போது கமலுடனான உறவு முறிவுக்கு வந்ததாகவும், கடந்த 2 வருடங்களாகவே இதுபற்றி தான் யோசித்து வந்ததாகவும் கவுதமி தெரிவித்துள்ளார். 
 
மேலும், இந்த பிரிவு எனக்கு நெஞ்சை உடைக்கும் சம்பவமாக இருக்கிறது. எனக்கும், அவருக்கும் உள்ள வாழ்க்கை எண்ணங்கள் வேறுபடுவதால், இருவரும் அனுசரித்து போக வேண்டும் அல்லது அவரவர்கள் பாதையில் பயணிக்க வேண்டும். எனவே, இந்த முடிவெடுத்தேன்” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் கவுதமி.
 
ஒரு வார இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் “நான் துன்பங்களை சகித்துக் கொண்டு வாழ்கிறேன் என்பதற்காக என் மகளும் அப்படியே வாழ வேண்டும் என்று அவசியம் இல்லையே?. அவள் விரும்பும் படி தனித்தன்மையோடு வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும் எனபது அவள் உரிமை. ஒரு தாயாக, அதை அமைத்துக் கொடுப்பது என் கடமை. நான் மட்டுமில்லை. என் குடும்பத்தினரும் சில பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தது. எனவே இந்த முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன்” என்று அவர் கூறியுள்ளார்.


 

 
ஆனால், கவுதமி உடனான பிரிவு குறித்து கமல் இதுவரை வாய்திறக்கவில்லை. அவர் வெளியிட்டதாக ஒரு அறிக்கை வெளியானது. ஆனால், அதை கமல் மறுத்தார். தனது டிவிட்டர் பக்கத்தில் “இத்தருணத்தில் என் பெயரால்  யாரோ அறிக்கை விட்டு விளையாடுவது விவேகமற்ற அநாகரீகச் செயல். நான் இச்சமயம் அறிக்கை ஏதும் வெளியிடுவதாய் இல்லை” என்று கூறினார்.
 
அந்த பதிவில், கவுதமி உடனான பிரிவு குறித்து அவர் எதுவும் குறிப்பிடவில்லை. மொத்தத்தில் அதுபற்றி  கமல் ஏதும் தெரிவிக்க விரும்பவில்லை என்பது புரிகிறது. நியாம்தான். அது அவர் சொந்த விவகாரம். எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
 
ஆனால், கடந்த ஒரு வருடமாகவே அவர்கள் இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இல்லை என்பதும், நெருங்கிய நண்பர்களுக்கு கூட தெரியாமல் இருவரும் அதை மறைத்து வந்துள்ளனர் என்பதும்,  கமலின் நட்பு வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 


 

 
சொந்த வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகள், தனது சினிமா வாழ்க்கையை பாதிக்காமல் பார்த்துக் கொள்பவர் கமல் என்பது அவரை பற்றி நன்கு தெரிந்த நண்பர்களுக்கு நன்றாகவே தெரியும்.  கவுதமி உடனான பிரிவு குறித்து நண்பர்கள் கேட்டதற்கு, அதுபற்றி பேச விருப்பமில்லை என்று கூறிவிட்டாராம் கமல். எனவே இதுபற்றி அவர் பேசலாம். பேசமலும் போகலாம்.
 
கவுதமியின் அறிவிப்பை தொடர்ந்து கமலின் உறவினர்கள், அவரது நீலங்கரை வீட்டில் கூடியுள்ளார்கள் என்றும், அவர்களுடன் கமல் மனம் விட்டு பேசி, ஆலோசனை செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
 
எதுவாய் இருப்பினும்.. இது அவரின் சொந்த விவகாரம்.....

 

வெப்துனியாவைப் படிக்கவும்